வருங்கால மனைவின்னு நம்பி பேசிய வாலிபர்.. 4 மாசம் கழிச்சு காத்திருந்த அதிர்ச்சி.. மொத்தமா 21 லட்சம் அபேஸ்?!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை புழுதிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரகுராம். இவர் மென்பொருள் நிறுவனம் ஒன்றில், சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், ரகுராமிற்கு திருமணம் செய்வதற்காக வீட்டில் பெண் தேடி வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேட்ரிமோனியில் ரகுராமுக்கு பெற்றோர் வரன் தேடி வந்த நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக, ரகுராமின் தந்தைக்கு தொலைபேசியில் அழைப்பு ஒன்று வந்துள்ளது.
ரகுராமின் தந்தையை அழைத்த நபர் தன்னுடைய பெயர் கல்யாணராமன் என்றும் தன்னுடைய அண்ணன் மகள் ஐஸ்வர்யா என்ற பெண்ணிற்கு மாப்பிள்ளை தேடி வருவதாகவும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து மகன் ரகுராம் விவரங்களை பெண்ணின் வீட்டிற்கும் அனுப்பி வைத்துள்ளார்.
மீண்டும் ரகுராமின் தந்தையை தொடர்பு கொண்ட கல்யாணராமன், வீட்டில் அனைவருக்கும் ரகுராமை பிடித்து விட்டதாகவும் நிச்சயம் செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து ரகுராம் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் செல்போனில் பேசி வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி ஒரு சூழலில் தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என கூறி ரகுராமிடம் மருத்துவ செலவிற்கு ஐஸ்வர்யா பணம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் 8,000 ரூபாயை அனுப்பி வைத்துள்ளார் ரகுராம். இதனைத் தொடர்ந்து அடுத்த நான்கு மாதங்களில் மேல் சிகிச்சைக்கு பணம் வேண்டும் என 74 முறை ரகுராமிடம் இருந்து சுமார் 21 லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்போது திருமண ஏற்பாடுகள் குறித்து ஐஸ்வர்யாவிடம் ரகுராம் கேட்டதற்கு கல்யாணராமன் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் ஏதேதோ காரணங்கள் கூறி தட்டிக் கழித்து வந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் திருமணம் வேண்டாம் என்றும் ஐஸ்வர்யா மறுத்ததாக கூறப்படும் நிலையில், அப்படி கூறியதால் தான் கொடுத்த பணத்தையும் திருப்பி கேட்டுள்ளார் ரகுராம். ஆனால், பணத்தை திருப்பி தர முடியாது என்று அவர்கள் கூற ஐஸ்வர்யா மற்றும் கல்யாணராமன் ஆகியோர் மூலம் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
போலீசாரும் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சேலத்தை சேர்ந்த தாத்தாத்ரி என்ற நபர் தான் கல்யாணராமன் என்ற பெயரிலும், ஐஸ்வர்யா என்ற பெயரிலும், புரோக்கர் ஆகவும் என மூன்று நபர் போல மாறி மாறி பேசி மோசடி செய்த அதிர்ச்சி விஷயம் விசாரணையில் தெரிய வந்தது.
இது தொடர்பாக தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் மேட்ரிமோனியில் இளம்பெண் பெயரில் கணக்கு தொடங்கி, மாடலிங் பெண்ணின் புகைப்படத்தை பயன்படுத்தி தாத்தாத்ரி மோசடி செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது.
ஒரே நபர் உறவினரை போலவும், பெண்ணை போலவும், புரோக்கர் போலவும் மாறி மாறி பேசி ஏமாற்றியுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், இது போன்று வேறு எத்தனை பேர்களை பெண்கள் பேரில் தாத்தாத்ரி ஏமாற்றி உள்ளார் என்பது குறித்தும், எவ்வளவு பணம் வாங்கி உள்ளார் என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.