"அடுத்த போட்டியில இந்த 3 பேரும் விளையாட மாட்டாங்க".. குண்டை தூக்கிப்போட்ட டிராவிட்.. முழு விபரம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் ஷர்மா உள்ளிட்ட 3 பேர் விளையாட மாட்டார்கள் என பயிற்சியாளர் டிராவிட் தெரிவித்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது இரு அணிகளும் விளையாடி வருகின்றன. முதலாவது போட்டியில் வங்கதேசம் வெற்றிபெற்று 1 - 0 எனும் கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இந்நிலையில், நேற்று இரண்டாவது போட்டி நடைபெற்றது. டாக்காவில் நடைபெற்ற இந்த போட்டியில் வங்கதேசம் வெற்றிபெற்றதை தொடர்ந்து, தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியிருக்கிறது.
இந்நிலையில், வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் ஷர்மா உள்ளிட்ட 3 பேர் விளையாட மாட்டார்கள் என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,"நாங்கள் ஒரு சில காயங்களுடன் போராடுகிறோம், அது எங்களுக்கு உகந்ததல்ல மற்றும் எளிதானது அல்ல. தீபக் சாஹர் மற்றும் ரோஹித் சர்மா நிச்சயமாக அடுத்த போட்டியில் விளையாட மாட்டார்கள் என்று நினைக்கிறேன். குல்தீப்பும் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். ரோஹித் மும்பைக்கு திரும்பி, அவரது கட்டை விரல் காயம் எப்படி இருக்கிறது என்பதை ஒரு நிபுணருடன் கலந்தாலோசித்து, டெஸ்ட் தொடருக்குத் திரும்ப வர முடியுமா இல்லையா என்பதை உறுதிப்படுத்துவார். எதையும் முன்கூட்டியே சொல்வது கடினம். ஆனால் நிச்சயமாக அவர் அடுத்த போட்டியில் விளையாட மாட்டார்" என்றார்.
நேற்றைய போட்டியில் முகமது சிராஜ் வீசிய இரண்டாவது ஓவரை அனமுல் ஹக் எதிர்கொண்டார். அப்போது பந்து அவருடைய பேட்டில் பட்டு எட்ஜ் ஆனது. அது இரண்டாவது ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த ரோஹித் சர்மாவை நோக்கிச் சென்றது. அதனை கேட்ச் எடுக்க ரோஹித் முயற்சிக்க, பந்து அவரது கையில் பட்டு நழுவியது. இதனால் காயமடைந்த ரோஹித் கைகளை உதறியபடி அங்கிருந்து வெளியேறினார்.
பின்னர் மருத்துவமனையில் அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது. இருப்பினும், நேற்றைய போட்டியின் பரபரப்பான கட்டத்தில் பேட்டிங் செய்ய வந்த ரோஹித் அபாரமாக ஆடி அரைசதம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
Also Read | ஆப்ரேஷனின்போது Football மேட்ச் பார்த்த நோயாளி.. ஆனந்த் மஹிந்திரா நெகிழ்ச்சி கமெண்ட்..!