தனியாக வாழ்ந்துவந்த பெண் சடலமாக மீட்பு.. ஆரம்பத்துல இருந்தே போலீசுக்கு உறுத்தலாக இருந்த விஷயம்.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஓசூரை சேர்ந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்ததாக ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கலுகொண்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஆஞ்சினம்மா என்ற மேரியம்மா. இவரது கணவர் உயிரிழந்த நிலையில் இவர் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் மத்திகிரி பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரமோத் ஜனா என்ற சோனுவுக்கும் மேரியம்மாவுக்கும் சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது.
இதனையடுத்து இருவரும் அவ்வப்போது சந்தித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி மேரியம்மா தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து மேரியம்மாவின் அண்டை வீட்டினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற மத்திகிரி போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது மேரியம்மா மற்றும் சோனு இடையே தொடர்பு இருந்ததை காவல் துறையினர் கண்டுபிடித்து இருக்கின்றனர். அதன் விளைவாக சோனு பணிபுரிந்து வந்த கம்பெனிக்கு சென்று அவர் குறித்து விசாரணையில் ஈடுபடும் போது தான், அவர் யாரிடமும் சொல்லாமல் வேலையை விட்டு நின்றது காவல்துறையினருக்கு தெரிய வந்திருக்கிறது. மேரியம்மா கொலை செய்யப்பட்ட நிலையில் அவருடன் தொடர்பில் இருந்ததாக சொல்லப்படும் சோனு திடீரென தலைமுறைவாகி இருப்பது காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதனால் அவரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. இந்நிலையில் குஜராத் மாநிலம் மார்பி பகுதியில் சோனு தலைமறைவாக இருப்பது காவல்துறையினருக்கு தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து மத்திகிரி போலீசார் குஜராத் மாநிலத்திற்கு சென்று அம்மாநில காவல்துறை அதிகாரிகளின் உதவியுடன் சோனுவை கைது செய்து ஓசூர் அழைத்து வந்திருக்கின்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
விசாரணையின் போது தனக்கும் மேரியம்மாவுக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகவும் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் அவரை கொலை செய்ததாகவும் சோனு வாக்குமூலம் அளித்ததாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து போலீசார் சோனு மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்திருக்கின்றனர்.

மற்ற செய்திகள்
