கனவுல தொல்லை கொடுத்து வந்த பாம்பு.. பரிகாரம் பண்ண போனவரின் நாக்குலயே கொத்திய பரபரப்பு சம்பவம்..
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தை சேர்ந்த ஒருவர் அடிக்கடி தனது கனவில் பாம்புகள் வருவதாக ஜோசியர் ஒருவரிடம் சென்றிருக்கிறார். அப்போது, இதனை ஒருவித தோஷம் என்றும் இதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் எனவும் அந்த ஜோசியர் கூறியதாக தெரிகிறது. மேலும், தனக்கு தெரிந்த இடம் ஒன்றில் பாம்பு புற்று இருப்பதாகவும் அங்கு இருக்கும் பூசாரியிடம் சென்று விபரத்தை கூறினால் பரிகாரம் செய்துவைப்பார் எனவும் கூறியிருக்கிறார் அந்த ஜோசியர்.
![Snakes coming in dream here is what TN man did Snakes coming in dream here is what TN man did](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/snakes-coming-in-dream-here-is-what-tn-man-did.jpeg)
இதனை அடுத்து அந்த நபரும் ஜோசியர் சொன்ன இடத்திற்கு சென்றிருக்கிறார். அங்கே இருந்த ஒருவர், பாம்புகள் கனவில் வந்தால் புற்றின் அருகே நாக்கை நீட்டி பரிகாரம் செய்ய வேண்டும் என சொல்லியதாக தெரிகிறது. இதனையடுத்து அந்த நபரும் பாம்பு புற்றின் அருகே அமர்ந்து நாக்கை நீட்டியிருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக, உள்ளே இருந்த விஷப் பாம்பு ஒன்று அவரின் நாக்கை தீண்டிவிட்டது.
இதனால், வலியில் துடித்த அந்த நபரை அவரது உறவினர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கின்றனர். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவரது நாக்கில் திசுக்கள் சேதமடைந்ததால் நாக்கையே அகற்றவேண்டும் என மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அறுவை சிகிச்சையில் அவரது நாக்கு அகற்றப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், அதிலிருந்து அந்நபர் குணமாகியதால் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார். பொதுமக்கள் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட கூடாது என மருத்துவர்கள் எச்சரித்திருக்கின்றனர். விபரீத பரிகாரத்தில் இறங்கிய இந்த நபருக்கு ஏற்பட்ட இந்த சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)