வானத்திலிருந்து விழுந்த மர்ம பெட்டி?.. தெறிச்சு ஓடிய கிராம மக்கள்.. தீயாய் பரவும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஹைதராபாத் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வானத்திலிருந்து மர்ம பெட்டி ஒன்று விழுந்ததாக வெளியான செய்தி அம்மாநிலத்தையே பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | ஆப்ரேஷனின்போது Football மேட்ச் பார்த்த நோயாளி.. ஆனந்த் மஹிந்திரா நெகிழ்ச்சி கமெண்ட்..!
ஹைதராபாத் நகரில் நேற்று வானத்தில் வினோத பொருள் ஒன்றை பார்த்தாக பலர் இணைய தளங்களில் பதிவிட்டு வந்தனர். இதனிடையே ஹைதராபாத் நகரத்திலிருந்து 100 கிமீ தொலைவில் உள்ள விகாராபாத் மாவட்டத்தில் உள்ள மார்பல்லி மண்டலத்தின் மொகிலிகிடா கிராமத்தில் விவசாய பூமியில் மர்ம பொருள் ஒன்று பாராசூட் துணையுடன் விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.
பார்ப்பதற்கு ராட்சத பெட்டி போல இருந்த அந்த பொருளில் கேமராக்கள் இருந்ததை கிராம மக்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். ஒருவேளை இது, ஏலியன்களின் வேலையாக இருக்குமோ என்றெல்லாம் இணையத்தில் பலரும் பேச துவங்கினர். இதனிடையே, கிராமத்தை சேர்ந்த சிலர் அந்த பொருளை வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட இந்த வீடியோ சற்று நேரத்தில் வைரலாகிவிட்டது.
இதனிடையே டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் (TIFR) அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் மர்ம பொருள் விழுந்த இடத்திற்கு வந்திருக்கின்றனர். அதன்பின்னரே அது TIFR அமைப்பின் ஆராய்ச்சி என்பது தெரிய வந்திருக்கிறது. வளிமண்டல அடுக்கு குறித்த ஆய்வுக்காக ஹீலியம் பலூன்களில் இந்த ஸ்பேஸ் கேப்ஸ்யூல் பொருத்தப்பட்டிருக்கிறது. அந்த ஆராய்ச்சியில் நிபுணர்கள் ஈடுபட்ட போதுதான் அது தடம் மாறி மொகிலிகிடா கிராமத்தில் விழுந்திருக்கிறது. இந்த விண்வெளி கேப்ஸ்யூல் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
1000 கிலோ எடைகொண்ட இந்த கேப்ஸ்யூல் ஹீலியம் பலூன் மூலம் பறக்க விடப்பட்டிருக்கிறது. இருப்பினும் இதனை ரிமோட் கண்ட்ரோல் மூலமாக கண்காணித்து வந்திருக்கின்றனர் ஆய்வாளர்கள். ஹீலியம் பலூன் தரையிறங்கியதும் அங்கு விரைந்து வந்த TIFR நிபுணர்கள் அந்த கேப்ஸ்யூலை பாகம் பாகமாக பிரித்து அங்கிருந்து எடுத்துச் சென்றிருக்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி போலீசாருக்கும் அந்த அமைப்பினர் தகவல் கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விவசாய பூமியில் விண்வெளி கேப்ஸ்யூல் வந்திறங்கிய சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இதனிடையே இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | "அடுத்த போட்டியில இந்த 3 பேரும் விளையாட மாட்டாங்க".. குண்டை தூக்கிப்போட்ட டிராவிட்.. முழு விபரம்..!