‘துப்பாக்கி எங்க கிடைச்சது..?’ பாலிடெக்னிக் மாணவர் சுடப்பட்ட சம்பவம்..! சரணடைந்த நண்பர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Nov 06, 2019 04:55 PM
பாலிடெக்னிக் மாணவர் துப்பாக்கியால் சுடப்பட்ட விவகாரத்தில் சரணடைந்த இளைஞருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்துள்ள வேங்கடமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முகேஷ். இவர் அப்பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று தனது நண்பர் விஜய் வீட்டுக்கு முகேஷ் சென்றுள்ளார். அப்போது வீட்டுக்குள் திடீரென வெடி சத்தம் கேட்டுள்ளது. உடனே அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது முகேஷ் நெற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார்.
இதனை அடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் முகேஷை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய விஜய் தலைமறைவாக இருந்த நிலையில் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இந்நிலையில் துப்பாக்கி கிடைத்தது தொடர்பாக நீதிமன்ற விசாரணையில் விஜய் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், சில மாதங்களுக்கு முன்பு குப்பைத்தொட்டி ஒன்றில் இருந்து துப்பாக்கியை எடுத்ததாகவும், பின்னர் அதனை வீட்டின் அருகே புதைத்து வைத்தாகவும் தெரிவித்துள்ளார். தீபாவளி சமயத்தில் அதைத் தோண்டி எடுத்து, வீட்டுக்கு வந்த முகேஷிடம் காண்பிக்கும் போது தவறுதலாக வெடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து துப்பாக்கியை கோவளம் கடலில் வீசி விட்டதாக விஜய் தெரிவித்ததாக கூறப்படுகிறது.