‘சென்னையில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து குழந்தை பலியான சம்பவம்’! இரண்டு பேரை கைது செய்த போலீசார்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 03, 2019 11:24 PM

சென்னையில் தந்தையுடன் பைக்கில் சென்ற குழந்தையின் கழுத்தில் மாஞ்சா நூல் சிக்கி பலியான சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

3 year old boy dies in Chennai after manja thread cuts neck

சென்னை ஏழுகிணறு கிருஷ்ணப்பக் குளத் தெருவை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் அபினேஷ்வரன் (3). நேற்று (03.11.2019) மாலை கோபால் தனது மகனை அழைத்துக்கொண்டு கொருக்குபேட்டையில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டுக்கு பைக்கில் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து வீடு திரும்பும்போது, கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் மேம்பாலத்தின் மேல் வந்துகொண்டு இருந்துள்ளார். அப்போது காற்றில் எங்கிருந்தோ பறந்து வந்த பட்டத்தின் மாஞ்சா நூல் பைக்கில் முன்னாடி அமர்ந்திருந்த குழந்தை அபினேஷ்வரன் கழுத்தில் சிக்கியுள்ளது.

கண் இமைக்கும் நேரத்தில் அந்த நூல் குழந்தையின் கழுத்தை அறுத்துள்ளது. இதனைப் பார்த்த கோபால் உடனே பைக்கை நிறுத்திவிட்டு கதறு அழுதுள்ளார். அப்போது  அருகில் இருந்தவர்கள் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அபினேஷ்வரனை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.தந்தை கண்முன்னே 3 வயது குழந்தையின் கழுத்தில் மாஞ்சா நூல் அறுத்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கொருக்குபேட்டையை சேர்ந்த நாகராஜன் (20)  மற்றும் 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சென்னை காசிமேடு ஏஜே காலனி பகுதியில் நேற்று மாலை மாடியில் காத்தாடி விட்ட சார்லஸ் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து காத்தாடிகளை பறிமுதல் செய்துள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டு முதல் சென்னையில் மாஞ்சா நூல் பட்டம் விட தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #CRIME #KILLED #CHENNAI #CHILD #DIES #MANJA