‘சில்லறை’ பிரச்சனையால் ‘இறக்கிவிட்ட’ நடத்துநர்.. ‘ஆட்டோ’ பிடித்து வந்து பயணி செய்த ‘அதிர்ச்சி’ காரியம்.. ‘பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Nov 26, 2019 10:26 PM

சென்னை தேனாம்பேட்டையில் சரியான சில்லறை இல்லை என நடத்துநர் இறக்கிவிட்ட பயணி ஒருவர் ஆட்டோ பிடித்து வந்து பேருந்தை வழிமறித்து அதன் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Chennai Passenger Breaks MTC Bus Glass Over Clash With Conductor

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பவர் சென்னை தி.நகரில் வாட்ச்மேனாக வேலை செய்து வருகிறார். இவர் இன்று தன் மகனை சொந்த ஊருக்கு ரயில் ஏற்றி அனுப்பிவிட்டு தி.நகர் செல்ல பேருந்தில் ஏறியுள்ளார். சில்லறை இல்லாததால் தன்னிடம் இருந்த 500 ரூபாயைக் கொடுத்து டிக்கெட் கேட்டுள்ளார். ஆனால் நடத்துநர் சில்லறை இல்லை என அவரை அடுத்த நிறுத்தத்தில் இறக்கிவிட்டுள்ளார்.

அதேபோல சில்லறை இல்லையென மேலும் 2 பேருந்துகளில் இருந்து கமலக் கண்ணன் இறக்கிவிடப்பட்டுள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த அவர் வீட்டிற்கு செல்வதற்காக ஆட்டோவில் சென்றுள்ளார். ஆட்டோ தேனாம்பேட்டை சிக்னல் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அவர் இறக்கிவிடப்பட்ட பேருந்துகளில் ஒன்றான 23-சி பேருந்து அவரைக் கடந்து சென்றுள்ளது. அதைப் பார்த்து மேலும் ஆத்திரமடைந்த கமலக்கண்ணன் சாலையில் இருந்த கல்லை எடுத்து அந்தப் பேருந்தின் முன்பக்க கண்ணாடி மீது எறிந்துள்ளார்.

இதில் பேருந்தின் கண்ணாடி உடைந்து சிதற, அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் பேருந்தை ஓரமாக நிறுத்தியுள்ளார். சில பயணிகள் பயத்தில் அலறி அடித்துக்கொண்டு பேருந்தை விட்டு இறங்கி ஓடியுள்ளனர். அதே நேரத்தில் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் கமலக்கண்ணனை மடக்கிப் பிடித்து சாலையோரமாக உட்கார வைத்துள்ளனர். பின்னர் அவரிடம் விசாரித்த பேருந்து ஓட்டுநர் மற்றும் போலீஸாரிடம் சில்லறை இல்லையென இறக்கிவிட்டதாலேயே ஆத்திரத்தில் கண்ணாடியை உடைத்ததாக அவர் கூறியுள்ளார்.

கமலக்கண்ணன் சற்று மன உளைச்சலால் பாதிக்கப்பட்டவர் போலத் தெரிவதாக அவர்கள் கூறியபோதும், அவர்மீது பொதுச் சொத்தை சேதப்படுத்தியதற்காக வழக்குப்பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பின் இயல்பு நிலை திரும்பியுள்ளது.

Tags : #MTC #CHENNAI #GLASS #PASSENGER #CONDUCTOR #AUTO