‘சொந்தக்காரங்க வீடுதான் டார்கெட்’.. ஐ.டி வேலையில வர சம்பளம் பத்தல’.. சென்னையை அதிர வைத்த இன்ஜினீயரிங் காதல் ஜோடி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 25, 2019 06:07 PM

உறவினர்களின் வீடுகளில் மட்டும் திருடி வந்த இன்ஜினீயரிங் காதல் ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர்.

Chennai lovers arrested by police for theft in relatives house

சென்னை காரம்பாக்கத்தில் உள்ள செங்குட்டுவன் தெருவை சேர்ந்தவர் ஜெகதீசன். கடந்த 21ம் தேதி இவரது வீட்டில் திருடு போயுள்ளது. இதுதொடர்பாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து அவரது வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்துள்ளனர். அப்போது ஒரு ஆணும், பெண்ணும் ஜெகதீசனின் வீட்டுக்குள் சென்று வந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

இதனை அடுத்து சிசிடிவி வீடியோ காட்சிகளை ஜெகதீசனுக்கு போலீசார் காண்பித்துள்ளனர். வீடியோவைப் பார்த்து அவர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். வீட்டுக்குள் செல்லும் வாலிபர் ஜெகதீசனின் தூரத்து உறவினர் கார்த்திக் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கார்த்திக்கை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து தெரிவித்த காவல் துறையினர், ‘கடந்த 21ம் தேதி ஜெகதீசன் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது தனது காதலி நித்யாவை அழைத்துக்கொண்டு கார்த்திக் அங்கு வந்துள்ளார். ஜெகதீசன் வழக்கமாக சாவி வைக்கும் இடம் கார்த்திக்கிற்கு ஏற்கனவே தெரிந்துள்ளது. அதனால் வீட்டை திறந்து பிரோவில் இருந்த நகை, பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்’ என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதில் கார்த்திக் பி.இ படித்துள்ளார். இவர் கோயம்பேடு அவ்வை திருநகரில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். பி.டெக் பட்டதாரியான நித்யா மதுரவாயிலில் பாட்டியுடன் வசித்து வருகிறார். இருவரும் கல்லூரி படிக்கும்போது காதலித்துள்ளனர். படிப்பு முடிந்து ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். ஆனால் அங்கு வாங்கும் அவர்களுக்கு சம்பளம் போதுமானதாக இல்லை. ஆடம்பரமாக வாழ நினைத்த அவர்கள் திருட முடிவு செய்துள்ளனர்.

ஆனால் வெளியிடங்களில் திருடினால் மாட்டிக்கொள்வோம் என எண்ணி உறவினர்களின் வீடுகளில் திருட முடிவெடுத்துள்ளனர். இதற்காக கார்த்திக்கை தனது உறவினர்களின் வீட்டுக்கு நித்யா அழைத்து சென்றுள்ளார். அதேபோல் கார்த்திக்கும் நித்யாவை அழைத்து சென்றுள்ளார். உறவினர்களுடன் நெருங்கி பழகி அவர்கள் வீட்டு சாவி வைக்கும் இடத்தை நோட்டமிட்டுள்ளனர். உறவினர்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் சாவியை எடுத்து சோப்பில் அச்சு எடுத்து டூப்ளிக்கேட் சாவியை ரெடி செய்து திருடியுள்ளனர். சில உறவினர்களின் வீட்டில் இந்த ஜோடி சிக்கியுள்ளது. ஆனால் உறவினர் என்பதால் புகார் ஏதும் கொடுக்காமல் மன்னித்து விட்டுள்ளனர். இந்நிலையில் ஜெகதீசன் அளித்த புகாரால் இந்த காதல் ஜோடி போலீசாரிடம் சிக்கியுள்ளது.

News Credits: Vikatan

Tags : #ROBBERY #CCTV #POLICE #CHENNAI #LOVERS #THEFT #ARRESTED #RELATIVES #HOUSE