'மகன் பேசுற பாஷை புரியல'...'41 வருடத்திற்கு பின்பு தாயை கண்ட மகன்'...சென்னையில் நெகிழ்ச்சி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Nov 25, 2019 08:56 AM

வறுமையால் 41 வருடத்திற்கு முன்பு தத்து கொடுக்கப்பட்ட மகன், தன் தாயை கண்டுபிடித்து வந்து சந்தித்துள்ள நெகிழ்ச்சி சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

Son Finds his Biological Mother After 41 Years in Chennai

சென்னை பல்லவரத்தை சேர்ந்த கலியமூர்த்தி-தனலட்சுமி தம்பதிக்கு, கடந்த 1976-ம் ஆண்டு இரண்டாவது மகனாகப் பிறந்தவர் டேவிட் நீல்சன். வறுமையின் காரணமாக டேவிட்டையும், மூத்த சகோதரர் ராஜனையும் பல்லாவரத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் தனலட்சுமி சேர்த்துள்ளார். சில நாட்கள் கழித்து அந்த காப்பகத்திற்கு வந்து பார்த்தபோது இரு குழந்தைகளையும் டென்மார்க் நாட்டை சேர்ந்தவர்கள் தத்தெடுத்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். டென்மார்க் தம்பதிகளால் வழங்கப்பட்ட டேவிட்டின் குழந்தைப்பருவ புகைப்படம் மட்டுமே தனலட்சுமியிடம் இருந்ததுள்ளது.

இதனிடையே காலங்கள் உருண்டோடிய நிலையில், கடந்த  2007-ம் ஆண்டு தனது தாயை தேடி டேவிட் சென்னை வந்தார். அப்போது அவரிடம் இருந்தது இரண்டு வயதில் தனது தாயாருடன் எடுக்கப்பட்ட கருப்பு வெள்ளை புகைப்படம் மற்றும் தன்னை தத்துக்கொடுத்த ஆதரவற்றோர் இல்ல முகவரி. பல்லாவரத்தில் சென்று அந்த ஆதரவற்ற இல்லத்தை பார்த்தபோது, அதனை 1990-ஆம் ஆண்டே முடிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த அவர் வருத்தத்துடன் தனது நாட்டுக்கு மீண்டும் திரும்பிச் சென்றார்.

இந்நிலையில் மீண்டும் தனது தாயை பார்க்க வேண்டும் என்ற பாச போராட்டத்தில், கடந்த 2013ம் ஆண்டு சென்னைக்கு வந்தார். அப்போது சமூக ஆர்வலர்கள் அஞ்சலி பவார் மற்றும் அருண் தோலே உள்ளிட்டோரைச் சந்தித்து தனது நிலையை தெரிவித்தார் அவர்களிடம் தாயுடன் இருக்கும் தன்னுடைய இரண்டு வயது புகைப்படம் மற்றும் பல்லாவரம் ஆதரவற்றோர் இல்ல முகவரியை அளித்து விட்டு சென்றார். அவர்கள் இருவரும் டேவிட் குறித்த தகவல்களை திரட்ட ஆரம்பித்தார்கள். அப்போது 1976-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பல்லாவரத்தில் கலியமூர்த்தி -தனலட்சுமி தம்பதிக்கு இரண்டாவது மகனாக டேவிட் பிறந்தது சென்னை மாநகராட்சி ஆவணங்கள் மூலம் தெரிய வந்தது.

இதனால் சமூக ஆர்வலர்கள் அஞ்சலி பவார் மற்றும் அருண் தோலே ஆகிய இருவருக்கும் புதிய நம்பிக்கை பிறந்தது. வறுமை காரணமாக தனது குழந்தைகளை காப்பகத்தில் விட்ட தனலட்சுமி, மீண்டும் தனது குழந்தைகளை பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது டென்மார்க்கை சேர்ந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இருவரும் தத்து கொடுக்கப்பட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரை, குழந்தைகள் இருவரும் இங்கே வறுமையில் வாடி கஷ்டப்படுவதை விட டென்மார்க்கில் செல்வச் செழிப்புடன் குழந்தைகள் வளர்வார்கள் என்று ஆறுதல் கூறி ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிகள் அவரை அனுப்பிவைத்துள்ளனர்.

மேற்கண்ட தகவல்களை சேகரித்த அஞ்சலி பவார், அருண் தோலே இருவரும் டேவிட் குறித்த ஒரு சிறிய குறும்படத்தை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு நண்பர்களுடன் அவருடைய பெற்றோரை தேடத் தொடங்கினர். இந்நிலையில் தனலட்சுமி தனது கடைசி மகன் சரவணனுடன் மணலியில் உள்ள ஒரு ஓட்டு வீட்டில் வசித்து வருவது தெரியவந்தது. இதையடுத்து தாய் கண்டுபிடிக்கப்பட்ட தகவல் டென்மார்க்கில் வசிக்கும் டேவிட்டுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து தனது தாயார் கிடைத்துவிட்டார் என்ற சந்தோஷத்தில், தாயை காண சென்னைக்கு பறந்தோடி வந்த டேவிட், தாயை காண கடந்த சனிக்கிழமை மணலியில் உள்ள வீட்டுக்கு சென்றார். இரண்டு வயதில் தான் இழந்த தன்னுடைய இரண்டாவது மகன் டேவிட் 43 வயதில் தன்னை தேடி வந்ததை கண்டு மகிழ்ச்சியில் மகனை கட்டி பிடித்து கதறி அழுதார். மகனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அழுத அவர், தனது எண்ணங்களை மகனிடம் கூறினார். ஆனால் அது டேவிட்டுக்கு புரியவில்லை காரணம் டேவிட்டுக்கு தமிழ் தெரியாது. தனலட்சுமிக்கு டேனிஸ் மொழி தெரியாது.

ஆனால் தாய்க்கும், மகனுக்கும் மொழி ஒன்று தடையா என்ன? அது தான் அன்பு மொழி இருக்கிறதே.தனது மகனை இழந்ததை சைகை மூலம், தாம் எவ்வாறெல்லாம் மனவருத்தத்தோடு இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து வந்தேன் என்பதை தனலட்சுமி தனது மகனுக்கு விளக்கிக் கூற முயன்றார். இது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது. உலகில் எந்த மூலையில் இருந்தாலும் தனது அன்பானவர்களை அவர்களுக்கு உரியவர்களிடம் சேர்க்க அன்பு ஒன்றே போதும் என்பதற்கு இந்த ஒரு நிகழ்வே சான்று.

Tags : #CHENNAI #BIOLOGICAL MOTHER #41 YEARS #SON