'நீங்க பிரியாணி பிரியரா'?...'திடீர்ன்னு வந்த சோதனை'... கவலையில் பிரியாணி பிரியர்கள்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Nov 26, 2019 12:30 PM
தமிழகத்தில் சில நாட்களாக உயர்ந்து வரும் வெங்காய விலை உயர்வு, பிரியாணியையும் விட்டு வைக்கவில்லை. இதனால் சென்னையில் பிரியாணியின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
வெங்காயம் அதிகமாக உற்பத்தி ஆகும் இடங்களில் அதிகமாக மழை பொழிந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள பெரிய மார்க்கெட்டுகளான, ஒட்டன்சத்திரம் மற்றும் கோயம்பேடு மார்க்கெட்களில் வெங்காய வரவு மிகவும் குறைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் வெங்காய விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ வெங்காயம் 90 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
இதனிடையே வெங்காயம் கிடைப்பதிலும் சிக்கல் நீடிப்பதால் ஹோட்டல்களில் உணவு சமைப்பதிலும் சிக்கல் நிலவுகிறது. அதிலும் முக்கியமாக பிரியாணி தயாரிக்க வெங்காயம் அதிக அளவில் தேவைப்படுவதால் பிரியாணி கடைக்காரர்கள் கலக்கத்தில் உள்ளார்கள். இதன் காரணமாக பிரியாணி விலையை கணிசமாக உயர்த்தி உள்ளார்கள். சென்னையில் இந்த விலை ஏற்றம் அதிக அளவில் காணப்படுகிறது.
சென்னையில் உள்ள நடுத்தர உணவகங்களில் தற்போது சிக்கன் பிரியாணி 200 ரூபாய்க்கும், மட்டன் பிரியாணி 250 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. சிறிய மற்றும் சாலையோர உணவகங்களில் 120 முதல் 130 வரையிலும், மட்டன் பிரியாணி 150 முதல் 180 வரை விற்கப்படுகிறது. வெங்காய விலை உயர்வினால் பிரியாணியின் விலை 30 முதல் 50 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
இதனிடையே உயர்ரக உணவகங்களில் சிக்கன் பிரியாணி 300 ரூபாய்க்கும் மட்டன் பிரியாணி 350 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதுபோன்ற உணவகங்களில் பிரியாணியின் விலையானது 50 முதல் 100 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இது பிரியாணி பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.