ஒரே குடும்பத்தில்... அடுத்தடுத்து நடந்த சோகங்கள்... அதிகாலையில்... இளைஞருக்கு நிகழ்ந்த பரிதாபம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 03, 2020 09:48 AM

ஒரே குடும்பத்தில் 2 ஆண்டுக்குள் தாய், தந்தையர் இறக்க புத்தாண்டு அன்று கீழே விழாமல் இருக்க மின் கம்பத்தை தொட்ட இளைய மகனும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Man Died After Electrocuted In Selaiyur In New Year

கிழக்கு தாம்பரம், ரயில்வே குடியிருப்பை சேர்ந்தவர் கௌதம சந்திரசேகரன் ரயில்வே ஊழியராக இருந்த இவருக்கு, செல்வி ரேணுகாதேவி என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு விக்னேஸ்வரன் (30) மற்றும் செந்தில் (26) என்ற 2 மகன்கள் இருந்தனர். தந்தை கௌதம சந்திரசேகரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்த போது உயிரிழந்தார். அதற்கு அடுத்த 2 மாதத்தில் தாய் செல்வி ரேணுகாதேவி ஒரு விபத்தில் பலியானார். மூத்த மகன் விக்னேஸ்வரன் அவரது மனைவி குழந்தைகளுடன் ரயில்வே குடியிருப்பில் வசித்து வருகிறார். 

தாய், தந்தையரை இழந்ததால் அண்ணன் குடும்பத்துடன், தம்பி செந்திலும் வசித்து வந்தார். தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் செந்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் புத்தாண்டு அன்று, கடந்த புதன்கிழமை அதிகாலை 1:30 மணி அளவில், பணி முடிந்து, வேளச்சேரி - தாம்பரம் பிரதான சாலையில் சேலையூர் காவல் நிலையம் எதிரே வீட்டிற்கு செந்தில் நடந்து சென்றார். அப்போது, நல்ல மழையின் காரணமாக சாலை முழுவதும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது சாலையில் தேங்கிய மழைநீரை தாண்டி, சாலையோரம் இருந்த மண் மேட்டின் மீது ஏற நினைத்தார்.

இதற்காக தண்ணீரிலிருந்து மண் மேட்டை நோக்கி தாண்டி குதித்துள்ளார். அப்போது பேலன்ஸ் தவறவே கீழே விழாமல் இருப்பதற்காக அருகில் இருந்த மின் கம்பத்தை பற்றி பிடித்துள்ளார். மின் கம்பத்தில் ஏற்கெனவே மின் கசிவு இருந்ததால், மின் கம்பத்தை செந்தில் பிடித்த அடுத்த நொடி அவர்மீது மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைப்பார்த்த அருகிலிருந்த அக்கம்பக்கத்தினர் சேலையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் செந்தில் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து நடந்த மரணங்களால் தாய், தந்தை மற்றும் சகோதரனை இழந்த மூத்த மகன் விக்னேஷ்வரன் தனியாகி உள்ளது அங்குள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags : #ACCIDENT #ELECTROCUTED #YOUTH