'டிரான்ஸ்பார்மரில் கேட்ட அலறல் சத்தம்' ...'காப்பாற்ற ஏறிய ஊழியர்' ...சென்னையை கலங்க வைத்த சோகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Jan 02, 2020 09:21 AM
புத்தாண்டு தினத்தில் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 ஊழியர்கள், மின்சாரம் தாக்கி பலியாகியுள்ள சம்பவம் சென்னையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புத்தாண்டு பிறந்த நிலையில் சென்னையில் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் கடுமையான மழையம் பெய்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனிடையே மழை நின்ற பின்பும் சவுகார்பேட்டை பகுதியில் மின்சாரம் வரவில்லை என சவுகார்பேட்டை துணை மின் நிலையத்துக்கு புகார்கள் வந்தன. புத்தாண்டு தினம் என்பதால் ஏராளமானோர் தொடர்ச்சியாக புகார்கள் தெரிவித்த வண்ணம் இருந்தனர்.
இதையடுத்து ஆவுடையப்பா நாயக்கர் தெருவில் உள்ள டிரான்ஸ்பார்மரை சரி செய்ய, சவுகார்பேட்டை துணை மின் நிலையத்தில் பணிபுரியும் உதயா, வின்சென்ட் ஆகிய மின் ஊழியர்கள் சென்றனர். வின்சென்ட் மேலே ஏறி பழுதை சரி செய்து கொண்டிருந்த நிலையில், கீழே இருந்த உதயா அவருக்கு உதவிகள் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென வின்சென்ட் அலறி துடித்தார். பழுதை சரி செய்து கொண்டிருந்த நேரத்தில் வின்சென்ட் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உதயா, அவரை காப்பாற்ற டிரான்ஸ்பார்மர் மீது ஏறினார். அப்போது உதயா மீதும் மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.
உதயா தூக்கி வீசப்பட்ட வேகத்தில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். அதே நேரத்தில் வின்சென்ட் ‘டிரான்ஸ்பார்மரின்’ மேலே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்டு அதிர்ந்து போன அந்த பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்கள்;. இதையடுத்து விரைந்து வந்த கொத்தவால்சாவடி போலீசார், வின்சென்டின் உடலை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மின் வாரிய அதிகாரிகளுக்கும், தீயணைப்பு படையினருக்கும் போலீசார் தகவல் கொடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து விரைந்து வந்த ஐகோர்ட்டு தீயணைப்பு படையினர் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ‘டிரான்ஸ்பார்மருக்கு’ வரும் அனைத்து மின் இணைப்பையும் துண்டித்தனர். பின்னர் தீயணைப்பு படையினர் மேலே இருந்த வின்சென்டின் உடலை கீழே இறக்கினர். பின்னர் பலியான இருவரது உடல்களையும் மீட்ட போலீசார் பிரேதபரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
புத்தாண்டு தினத்தில் இரண்டு மின்சார ஊழியர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.