“பயமா இருக்கு அண்ணா”... ‘தம்பிக்கு ஆறுதல் கூறிவிட்டு’... ‘திரும்பி வந்து பார்த்தபோது’... 'நடந்தேறிய விபரீதம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Feb 19, 2020 11:13 AM

தூத்துக்குடியில் பிளஸ் 2 மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Brother Committed Suicide Due to Scare of 12th Public Exam

தூத்துக்குடி திரேஸ்புரம், சங்குகுளி காலனியைச் சேர்ந்தவர் ராஜா மகன் எட்வின் (17). இவர் பீச் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்துள்ளார். இவரது தாயார் மனநிலை பாதிக்கப்பட்டதால், அவர் புன்னக்காயலில் உள்ள உறவினர் வீட்டில் பல ஆண்டுகளாக தங்கியுள்ளார். தந்தை ராஜா அடிக்கடி கடலுக்கு மீன்பிடிக்க சென்றுவிடுவதால் எட்வின் மற்றும் அவரது அண்ணன் ரபேக் இருவரையும், அவர்களது பாட்டி வளர்த்து வந்துள்ளார்.

மாணவர் எட்வின் கடந்த சனிக்கிழமை முதல் பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ‘பள்ளிக்கு செல்லவில்லை என்றால், உனது தந்தை கடலில் இருந்து திரும்பி வந்ததும் சொல்லி விடுவேன்’ என்று எட்வினிடம் அவரது பாட்டி நேற்று காலை கூறியுள்ளார். தம்பி பள்ளிக்கு செல்லாதது குறித்து அண்ணன் கேட்டபோது, “எனக்கு படிப்பு வரவில்லை, பொதுத்தேர்வில் பெயில் ஆகிவிடுவேன் என்று பயமாக உள்ளது” எனக் கூறியுள்ளார். இதையடுத்து அவருக்கு ஆறுதல் கூறிய அவரது அண்ணன், பின்னர் வேலைக்குச் சென்றுவிட்டார்.

பின்னர், மதியம் அவரது அண்ணன் திரும்பி வந்து பார்த்தபோது, எட்வின் மின் விசிறியில் தூக்கிட்ட நிலையில் பிணமாக தொங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அண்ணன் மற்றும் பாட்டி கதறி அழுதனர். இதுகுறித்து வடபாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எட்வினின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தேர்வு பயம் தான் உண்மையான காரணமா என்பது குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக் கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத் துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Tags : #SUICIDEATTEMPT #SCHOOLSTUDENT #PLUS TWO #BROTHER