‘பரீட்சை சரியா எழுதலன்னு திட்டிய ஆசிரியர்’.. கோபத்தில் ஆசிரியர்கள் முன் கல்லூரி மாணவர் செய்த அதிர்ச்சி காரியம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Feb 12, 2020 03:38 PM

தேர்வு ஒழுங்காக எழுதவில்லை என ஆசிரியர் கண்டித்ததால் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Polytechnic college student attempt suicide in Nagapattinam

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள புத்தூரில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி இயங்கி வருகிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் இந்திரா நகரைச் சேர்ந்த பிரேம்குமார் (20) என்ற மாணவர் இக்கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று கல்லூரியில் சுழற்சி தேர்வு நடைபெற்றுள்ளது. அதில் மாணவர் பிரேம்குமார் சரியாக எழுதவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆசிரியர் ஒருவர், மாணவர் பிரேம்குமாரிடம் தேர்வு சரியாக எழுதாதது குறித்து கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரேம்குமார் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் விஷத்தை குடிக்க முயன்றுள்ளார், உடனே ஆசிரியர்களும், மாணவர்களும் பிரேம்குமாரிடமிருந்த விஷப் பாட்டிலை பிடுங்கி எறிந்துள்ளனர்.

ஆனாலும் சிறிது விஷத்தை பிரேம்குமார் குடித்துவிட்டதால், அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த சக மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து கல்லூரி வாசல் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து கல்லூரிக்கு வந்த போலீசார் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Tags : #COLLEGESTUDENT #SUICIDEATTEMPT #NAGAPATTINAM