‘காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி’... ‘பஸ் ஸ்டாப்பில்’... ‘இளைஞர் செய்த காரியத்தால்’... 'அதிர்ந்துபோன பொதுமக்கள்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Feb 10, 2020 07:43 PM

ராஜபாளையம் அருகே கல்லூரி மாணவி காதலிக்க மறுத்ததால் தீக்குளித்து இளைஞர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Rajapalayam man Suicide Attempt due to Denial of Love

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண் குமார் (25). பி.ஏ. பட்டதாரியான இவர், அதேப் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அந்த மாணவி காதலை ஏற்க மறுத்ததால், ஏற்கனவே விஷம் அருந்தி அருண் குமார் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.  ஆனாலும் அந்த மாணவி அருண் குமாரின் காதலை ஏற்கவில்லை. இருப்பினும் தினமும் அந்த மாணவி கல்லூரிக்கு செல்லும்போது அருண் குமார் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை அந்த மாணவி கல்லூரி செல்வதற்காக சேத்தூர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அங்கு வந்த அருண் குமார், மாணவியிடம் தனது காதலை ஏற்குமாறும், தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி கூறியுள்ளார். ஆனால் மாணவி அவரை பொருட்படுத்தாமல் சென்று விட்டார். இதனால் விரக்தியடைந்த அருண் குமார் தீடீரென தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி கண்ணிமைக்கும் நேரத்தில் தீ வைத்துக்கொண்டார். உடல் தீப்பற்றி எரிந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பொதுமக்கள் உடனே அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

இருப்பினும் அருண் குமாரின் முதுகு, கை, கால்களில் தீக்காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த சேத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அருண் குமாரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு  60 சதவீத தீக்காயங்களுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சேத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒருதலைக் காதலால் இளைஞர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக் கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.