‘வாய் பேச முடியாத, காது கேட்காத’... ‘11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை’... ‘குற்றஞ்சாட்டப்பட்ட 15 பேருக்கும் தண்டனை’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Feb 03, 2020 05:00 PM

சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில், வாய் பேச முடியாத, காது கேட்காத 11 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 15 பேருக்கும் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

Ayanavaram Deaf and Dumb Girl Rape Case Court ordered

சென்னை அயனாவரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், பள்ளிக்கு செல்லும்போதும், வரும்போதும் லிஃப்டை பயன்படுத்தியபோதும், அங்கு லிஃப்ட் ஆப்ரேட்டராக பணிபுரிந்த 66 வயதுடைய ரவிக்குமார் என்பவர் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். அதோடு சிறுமியை தவறாக செல்ஃபோனில் படம்பிடித்த அவர், வீடியோவை காண்பித்து மிரட்டியுள்ளார். பின்னர், அந்த வீடியோவை அங்கு பணிபுரிந்து வந்த பிளம்பர் உட்பட தனது நண்பர்களுக்கு காண்பித்து வந்துள்ளார். பின்னர் அந்தக் கும்பல் மயக்க ஊசி போட்டும், போதை ஊசி போட்டும் சிறுமியை 7 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.

தனக்கு வயிற்று வலி என்று சிறுமி அடிக்கடி சகோதரியிடம் சொல்லவும்தான், விஷயம் பெற்றோரிடம் கொண்டு செல்லப்பட்டு அதிர்ந்து போனார்கள். பிறகு அயனாவரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் தரப்பட்டது. இதையடுத்து அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வேலைப் பார்த்த வாட்ச்மேன், தண்ணீர் கேன் போடுபவர், லிப்ட் ஆப்ரேட்டர், வீட்டு வேலை செய்பவர் என 25 வயது முதல் 66 வயது வரை உள்ள மொத்தம் 17 பேர் போக்சோ சட்டத்தின்கீழ், கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டனர்.  இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது.

இந்த வழக்கில் கைதான 17 பேருக்கும் ஜாமீன் வழங்கப்படாததால் தொடர்ந்து கடந்த ஒன்றரை வருடமாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 17 பேரில் பாபு என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டார். மீதமுள்ள 16 பேரில், குற்றம் சாட்டப்பட்ட தோட்டக்காரர் குணசேகரன் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். மற்ற 15 பேரும் குற்றவாளிகள் என போக்சோ நீதிமன்றம் நீதிபதி கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தீர்ப்பளித்தார்.

அவர்களுக்கான தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, 4 பேரை சாகும் வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்படப்பட்டுள்ளது. ஒருவருக்கு 7 ஆண்டு சிறையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 9 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.