'திருமண' விருந்துக்கு சென்று திரும்பிய போது... 'நண்பர்களுக்கு' நேர்ந்த துயரம்... சம்பவ இடத்திலேயே '4 பேர்' பலி... 7 பேர் படுகாயம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ராணிப்பேட்டையில் திருமண விருந்துக்கு சென்று திரும்பியபோது, ஆட்டோ கவிழ்ந்ததில் நண்பர்கள் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

ராணிப்பேட்டை அருகேயுள்ள ஹாஜிபேட்டையை சேர்ந்தவர் நிக்கால்(20). இவரது சகோதரிக்கு திருமண வரவேற்பு நடைபெற்றது. இதையொட்டி அவர் தன்னுடைய நண்பர்களுக்கு விருந்து வைத்தார். இதில் கலந்து கொள்ளுமாறு நண்பர்களுக்கு அழைப்பு விடுக்க அழைப்பின் பேரில் ஆரிப் (20) சையத் (20), கரிமுல்லா (19) துபெயில் அகமது (19), கலீம் (20), முபாரக் (20), இதயத்துல்லா (20), ஆரிப் (18), சையத் (21), நியாஸ் (18), ஜபருல்லா (19) ஆகிய 11 பேருடன் நேற்று இரவு ஆற்காடு அருகே உள்ள பஞ்சபாண்டவர் மலைக்கு ஆட்டோவில் சென்றனர். ஆட்டோவை ஆரிப் ஓட்டி சென்றார். நிக்கால் தனியாக சென்றார்.
விருந்து முடிந்து நண்பர்கள் அனைவரும் இரவு 1 மணியளவில் ஆட்டோவில் மீண்டும் வீட்டுக்கு திரும்பினர். மேல்விஷாரம் கத்தியவாடி ரோட்டில் வந்த போது நிலை தடுமாறிய ஆட்டோ தோல் தொழிற்சாலை காம்பவுண்டு சுவர் மீது மோதி கவிழ்ந்து, நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கிய ஆட்டோவில் இருந்த சையத், கரிமுல்லா, கலீம், துபெயில் அகமது ஆகியோர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். மற்ற நண்பர்கள் அனைவரும் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியானவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே பகுதியை சேர்ந்த நான்கு நண்பர்கள் விபத்தில் இறந்த செய்தி அப்பகுதி மக்களுக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
