'நல்லா தான் காதலிச்சோம்'... 'வாய் கூசாம கணவன் சொன்ன வார்த்தை'... சென்னையில் இளம்பெண் அதிரடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Mar 14, 2020 09:54 AM

தனது நடத்தை சரியில்லை எனக் கணவன் கூறிய நிலையில், சென்னையில் இளம் பெண் எடுத்த அதிரடி முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chennai : Woman sits on Dharna in front of husband\'s house

திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் லைன் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ண பிரசாத். துணிக்கடையில் வேலை பார்த்து வந்த இவர், புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரி என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இதற்கிடையே இருவருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், கடந்த 2017ம் ஆண்டு முதல் இருவரும் தனிக் குடித்தனம் நடத்தி வந்துள்ளார்கள்.

இந்த சூழ்நிலையில் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட, பரமேஸ்வரி, கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். பின்னர் சமாதானம் அடைந்த அவர், மீண்டும் கணவர் வீட்டுக்குச் சென்றபோது, ''உனது நடத்தை சரி இல்லை, உன்னுடன் சேர்ந்து வாழ முடியாது எனக் கணவர் கிருஷ்ண பிரசாத் கூறியதாகத் தெரிகிறது. இதைக் கேட்டு அதிர்ந்துபோன பரமேஸ்வரி, நடந்த சம்பவம் குறித்து திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து இருவரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.

இதற்கிடையே கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி பரமேஸ்வரி, கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி திருவொற்றியூர் போலீஸ் நிலையம் முன் தீக்குளிக்க முயன்றார். பின்னர் கணவர்-மனைவி இருவரையும் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அதன்பின்பு இருவரும் மகிழ்ச்சியாக வாழத் தொடங்கிய நிலையில், சில நாட்கள் கழித்து இருவருக்கும் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது.

இந்தச்சூழ்நிலையில் நேற்று காலை தனது கணவர் வீட்டிற்கு வந்த பரமேஸ்வரி, கணவர் மற்றும் அவர் குடும்பத்தார் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், தனக்குக் கணவன் வீட்டில் பாதுகாப்பு இல்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி தன்னந்தனியாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

கணவர் வீட்டின் முன்பு மனைவி அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் பரமேஸ்வரியிடம் சமாதானம் பேசினர். சுமார் 4 மணி நேரத்துக்குப் பிறகு அவரை போலீஸ் நிலையம் நிலையம் அழைத்துச் சென்றனர். இதற்கிடையே நடந்த சம்பவம் குறித்து கண்ணீர் மல்கக் கூறிய அவர், ''கணவரும், அவரது குடும்பத்தாரும் என்னைக் கொடுமைப்படுத்துகிறார்கள். இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. கடந்த வாரம் என்னை வீட்டில் வைத்துப் பூட்டிவிட்டு அனைவரும் சொந்த ஊரான கேரளா சென்றுவிட்டனர்.

3 நாட்கள் உணவு, குடிநீர் இன்றி தவித்த நான், முதல் மாடி வழியாகக் கீழே குதித்து உயிர் தப்பினேன். இதில் எனக்குக் காயம் ஏற்பட்டது. நான் அணிந்து கொள்ள மாற்று உடைகள் கூட இல்லை. அதைக் கேட்டால் கணவன் மற்றும் அவர் குடும்பத்தார் தர மறுக்கிறார்கள். எனது கணவன் மற்றும் அவர் குடும்பத்தார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக் கூறினார்.

Tags : #POLICE #CHENNAI #HUSBAND #WIFE #DHARNA