'பலிகடா ஆன 'ஐடி' வேலை போன இளைஞர்கள்'... 'பெண்களுக்கு வேற டெக்நிக்'... சென்னையை நடுங்க செய்த மோசடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Mar 12, 2020 01:31 PM

ஐ.டி.நிறுவனங்களில் வேலையிழந்த இளைஞர்களைக் குறிவைத்து, போலி கால்சென்டர் நடத்தி கோடிக்கணக்கான பணம் சுருட்டிய சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Police busts fake call centre, 4 held

மோசடிகள் குறித்து மக்களிடம் பலவிதங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், இன்னும் மோசடி கும்பலிடம் சிக்கி ஏமாறும் மக்கள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். அந்த வகையில் சென்னையில் தற்போது நடந்துள்ள மோசடியில் பல படித்த உயரதிகாரிகள் முதல் நீதிபதிகள் வரை சிக்கியுள்ளார்கள். அதுகுறித்து விவரிக்கிறது  இந்த செய்திக் குறிப்பு.

தற்போது நிலவி வரும் வேலை இல்லா திண்டாட்டத்தை மோசடி கும்பல் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது. அதன் விளைவாக ஐ.டி.நிறுவனங்களிலும், செல்போன் நிறுவனங்களிலும், தனியார் நிதி நிறுவனங்களிலும் கை நிறையச் சம்பளத்துடன் வேலை பார்த்து, பின்னர் வேலையை இழந்த இளைஞர்களை தங்களின் மோசடி கால்சென்டருக்கு வேலைக்கு எடுத்துள்ளார்கள்.

இந்த இளைஞர்கள் பொதுமக்களின் செல்போன் எண்களைச் சேகரித்து அவர்களுக்கு போனில் பேசுவார்கள். குறைந்த வட்டிக்கு வங்கியில் கடன் வாங்கி தருவதாக இவர்கள் சொல்வார்கள். இவர்களின் இனிப்பான பேச்சுக்கு மயங்குபவர்களிடம், அவர்களின் ஆதார் எண், வங்கி ஏ.டி.எம். ரகசிய குறியீட்டு எண், வங்கிக் கணக்கு விவரம், பான் கார்டு விவரம் போன்றவற்றைச் சேகரித்து, அதன் மூலம் மோசடி வலையை வீசுவார்கள். பின்பு வங்கிக் கடன் தொகைக்கு ஏற்ப முன் பணம் செலுத்த வேண்டும் எனக் கூறுவார்கள்.

இதையடுத்து தங்களது வங்கிக் கணக்கிற்கு வரும் தொகையைச் சுருட்டும் அந்த கும்பல், பணம் போடும் நபர்களின் ஓ.டி.பி. எண்ணை வாங்கி, அதன் மூலம், அவர்களது வங்கி கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் ஆன்லைன் மூலம் எடுத்து ஏப்பம் போட்டு விடுவார்கள். அதேபோன்று வங்கியிலிருந்து அதிகாரி பேசுவது போலப் பேசி, ஏ.டி.எம்.கார்டை புதுப்பித்துத் தருவதாகச் சொல்லி, ஏ.டி.எம்.கார்டின் ரகசிய குறியீட்டு எண்ணை வாங்கியும் இன்னொரு வகையான நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்த மோசடி கும்பலிடம் சாதாரண மக்கள் மட்டுமல்லாது உயரதிகாரிகள், மற்றும் சில நீதிபதிகள் கூட சிக்கியுள்ளார்கள். இதுவரை இந்த கும்பலிடம் தமிழகம் முழுவதும் சுமார் ஆயிரம் பேர் வரை ஏமாந்து, கோடிக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். இதில் 400 பேர் வரை புகார் கொடுத்துள்ளனர். மோசடி கும்பல் நடத்திய போலி கால் சென்டரில் மட்டும் 70 பேர் வேலை செய்துள்ளனர். இவர்களுக்கு மாதம் ரூ.13 ஆயிரம் வரை சம்பளம் கொடுத்துள்ளனர்.

அதோடு இந்த போலி கால் சென்டரில் வேலை பார்த்த இளம்பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி தங்களது காம இச்சையையும் தீர்த்துள்ளார்கள். இந்த வழக்கில் சென்னை பென்ஸ் கிளப் உரிமையாளர் பென்ஸ் சரவணன், பிரபல அரசியல் கட்சி பிரமுகர் செல்வா என்ற செல்வகுமார் மற்றும் வேளச்சேரியைச் சேர்ந்த குமரன், ராயப்பேட்டையைச் சேர்ந்த மிதுன்ராயன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் செல்வகுமார்தான் இந்த மோசடிக்கு மூளையாகச் செயல்பட்டவர்.

பென்ஸ் சரவணன் தனது கிளப் நஷ்டத்தில் செயல்பட்டதால், கிளப் செயல்பட்ட கட்டிடத்துக்கு ரூ.5 லட்சம் வாடகை கொடுக்க முடியாமல், இந்த மோடி கும்பலுக்குத் தனது அலுவலகத்தை வாடகைக்கு விட்டு, மோசடி பணத்திலிருந்து பங்கு வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மோசடி கும்பலானது பென்ஸ், ஜாக்குவார், பி.எம்.டபிள்யூ போன்ற சொகுசு கார்களில் வலம் வந்துள்ளார்கள்.

இதற்கிடையே இந்த மோசடி தொடர்பாக போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நேற்று மாலை சென்னை அண்ணாசாலை பகுதியில் செயல்பட்ட போலி கால்சென்டர் ஒன்றிலும் தனிப்படை போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #POLICE #TAMILNADUPOLICE #CHENNAI POLICE #FAKE CALL CENTRE #BUSTS