‘கொரோனா’ பாதித்த ‘இளைஞர்’... மால், சினிமா, நிச்சயதார்த்தம் என ‘வெளியே’ சென்றிருந்ததால் ‘பரபரப்பு’... அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்...
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் கொரோனா பாதித்த இளைஞர் ஒருவர் வணிக வளாகத்திற்குச் சென்று திரைப்படம் பார்த்துவிட்டு திரும்பிய சம்பவம் நடந்துள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த கொரோனா பாதித்த இளைஞர் ஒருவர் வணிக வளாகத்திற்குச் சென்று திரைப்படம் பார்த்துவிட்டுத் திரும்பியுள்ளார். மேலும் அவர் அந்த ஊரில் நடந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்றுள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து திரும்பியவர்கள் தனிமையில் இருந்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும், அறிகுறி தென்பட்டால் முறையாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டுமென நாடு முழுவதும் விழிப்புணர்வுச் செய்திகள் வந்தவண்ணம் உள்ள நிலையில் அந்த இளைஞரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்துப் பேசியுள்ள மாவட்ட ஆட்சியர், “கொரோனா பாதிப்புள்ள இளைஞரின் குடும்பத்தினரை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். மேலும் அந்த இளைஞருடன் நேரடியாக தொடர்பில் இருந்த 355 பேரின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. கொடுங்கலூரைச் சேர்ந்த அவர் பிப்ரவரி 29ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்ட பத்தனம்திட்டாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்துடன் கத்தாரிலிருந்து கொச்சிக்கு பயணம் செய்து வந்துள்ளார். பின்னர் அவர் மார்ச் 5ஆம் தேதி தொண்டை வலி காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றிற்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார். அதன்பிறகு மார்ச் 8ஆம் தேதி பத்தனம்திட்டாவைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டபோதே அந்த இளைஞர் குறித்தும் கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். முதலில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டபோது அதிர்ச்சியால் மனஅழுத்தத்தில் இருந்த அந்த இளைஞரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவருக்கு கொரோனாவிற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே அந்த இளைஞரின் உறவினர் ஒருவருடைய 8 மாத குழந்தைக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், அந்தக் குழந்தை தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
