“சினிமாவுக்கு போய்ட்டான்.. நல்லா இருப்பான்னு நெனைச்சேன்!”.. ‘வடபழனி’ பிளாட்பார்மில் கண்கலங்கவைத்த உதவி இயக்குநர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Feb 27, 2020 09:18 AM

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட செய்தி இது‌. இயக்குநராகும் ஆசையில் சென்னை வந்த ஒருவர் சென்னை வடபழனி சாலையோரம் கேட்பாரற்று கிடப்பதாகவும் அவருக்கு உதவுமாறும் யாரோ ஒருவர் பதிவிட்ட முகநூல் பதிவு கிடுகிடுவென பரவியது.

வடபழனி உதவி இயக்குநர் asst director lives in roadside chennai

அப்படியா என்று அவரைத் தேடிச் சென்று பார்த்தவர்களுக்கு அப்போதுதான் தெரிந்தது, கிழிந்த உடைகள், சிக்குப் பிடித்த தலைமுடி, அழுக்கேறிய உடல் என அலங்கோலமாக காட்சி தந்த அந்த நபர் நடிகர் குணால், மோனல் நடித்து வெளிவந்த பார்வை ஒன்றே போதுமே படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த இவரின் உண்மையான பெயர் குருநாதன். மேற்கூறிய திரைப்படத்தில் உதவி இயக்குநராக இருந்த குருநாதன் அடுத்தடுத்து வாய்ப்புகளைத் தேடிச் சென்றபோது கோடம்பாக்கத்தின் இறுக்கமான கதவு திறக்க மறுக்கவே திக்கு திசை தெரியாமல் திகைத்து போயிருக்கிறார்.

தினசரி உணவுக்கு வயிற்றை அனுசரிக்க முடியாமல், கடைசியில் கைகொடுத்த வடபழனி சாலையோர பிளாட்பாரத்தில், பஞ்சம் தாளாமல் தஞ்சமடைந்தார். பல நேரங்களில் பசியே உணவாக உட்கொண்டுள்ளார். இத்தனை துயரங்களுக்கும் நடுவில் அவர் ஒன்றை மட்டும் நிறுத்தவே இல்லை. எங்கிருந்தோ பேனாவையும் பேப்பரையும் வாங்கி வைத்திருந்த அவர் எந்நேரமும் எழுதியபடியே இருந்துள்ளார்.  இவர் எழுதிக்கொண்டிருந்த போதுதான் புகைப்படம் எடுத்து அந்த புகைப்படத்தை இணையதளத்தில் சிலர் பகிர்ந்துள்ளனர். அவர்  வைத்திருந்த பேப்பரில் கதைகளும் கவிதைகளும் இருந்ததைப் பார்த்த சிலர் இதுபற்றி அவரிடம் சென்று கேட்டபோது, தன் கதைகள் திருடப்பட்டதாகத் தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்துள்ளார். பின்னர் அவருக்கு உதவிய சிலர், அவருடன் படித்த அவரது ஊர்காரரான வேல்முருகன் என்பவரை தொடர்புகொள்ள, அவர் வந்து தனது நண்பரை மீட்டுள்ளார்.

‘சினிமாவுக்கு போயிட்டான்.. எங்கயோ நல்லா வாழ்ந்துட்டு இருப்பானு நெனைச்சேன்’ என்று ஆதங்கத்துடன் கூறும் வேல்முருகன், ‘அவன் தன் கதையை திருடிட்டாங்கனு சொல்லிட்டே இருக்கான். எந்தத் துறையாக இருந்தாலும் சக மனிதரிடம் மனிதாபிமானத்துடன் நடந்துக்கங்க’ என்று பொதுவாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags : #CHENNAI #CINEMA #DIRECTOR