'காட்டு வேலைக்கு போனாதான் சாப்பாடு'... 'அசுர வேகத்தில் வந்த கார்'... ஒரு நொடியில எல்லாம் போச்சு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காட்டு வேலைக்குச் செல்லும் கூலித் தொழிலாளிகள் சென்ற வாகனத்தின் மீது, கார் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளர்கள் காட்டு வேலைக்குச் செல்வது வழக்கம். தினசரி இந்த வேலைக்குச் சென்றதால் தான் அவர்களுக்கு வருமானம் வரும். இவ்வாறு செல்லும் தொழிலாளர்களைச் சரக்கு வாகனத்தில் அழைத்துச் செல்வது வழக்கம். அந்தவகையில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைச் சரக்கு வாகனத்தில், தண்டியநேந்தல் அருகே உள்ள பந்தல்குடியை நோக்கி அழைத்து செல்லப்பட்டனர்.
அப்போது அருப்புக்கோட்டை புறவழிச் சாலையில் வாகனம் வந்தபோது எதிரே அதிவேகமாக வந்த கார் எதிர்பாராத விதமாக மோதியது. கார் மோதிய வேகத்தில் சரக்கு வாகனம் தலைகுப்புற கவிழ்ந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர விபத்தில், சரக்கு வாகனத்தில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த, விஜயலட்சுமி மற்றும் பழனியம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதற்கிடையே சம்பவம் குறித்த அறிந்த காவல்துறை மற்றும் தீ அணைப்பு துறையைச் சேர்ந்த வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டார்கள். படுகாயமடைந்த 18 பேருக்கும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் மாரி என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
