'சிவராத்திரி' விழாவுக்கு சென்றுவிட்டு 'திரும்பியபோது' பரிதாபம்... நேருக்கு நேர் 'மோதிக்கொண்ட' கார்கள்... 2 பேர் பலி... 7 மாத 'குழந்தை' உள்ளிட்ட 8 பேர் படுகாயம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலம் மாவட்டம் பழைய சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் விஜயவர்மன். இவரது மனைவி கவுரி (வயது35). இவர்களுக்கு தேவதிசா என்ற 7 மாத பெண் குழந்தை உள்ளது. இவரது உறவினர்கள் ஜோதி (55), சுவர்ணலகரி (19), ஜீவிதா (23), அனுசியா தேவி (25), சுபாதேவி (39), லட்சுமி (50), மித்ரா (7) ஆகியோர் நேற்று காலை கார் மூலம் சேலத்தில் இருந்து கோவை வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா யோக மையத்திற்கு சென்று அங்கு நடைபெற்ற சிவராத்திரி விழாவில் பங்கேற்றனர்.

விழா முடிந்து அனைவரும் கோவையில் இருந்து சேலம் நோக்கி நள்ளிரவில் காரில் வந்து கொண்டிருந்தனர். காரை நவீன்குமார் என்பவர் ஓட்டி வந்தார். நள்ளிரவு 1.30 மணியளவில் ஆட்டையாம்பாளையம் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை மீறி தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு எதிர்புறம் சென்றது. அப்போது கோவையில் இருந்து வந்து கொண்டிருந்த கார் ஒன்று இந்த காரின் மீது மோதியது. இதில் 7 மாத பெண் குழந்தையின் தாயான கவுரி(35) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் விபத்தில் காயமடைந்த அனைவரையும் ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மருத்துவமனை செல்லும் வழியிலேயே ஜீவிதா உயிரிழந்தார். மற்ற அனைவரும் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். அதிர்ஷ்டவசமாக எதிர்புறம் வந்த காரின் முன்பகுதி மட்டுமே சேதமானதால் அதிலிருந்த அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
