‘வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி’... ‘உறவினர்போல் பேச்சு கொடுத்து’... ‘பெண் ஒருவர் செய்த காரியம்’... ‘அதிர்ச்சியான மருமகள்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Oct 25, 2019 12:07 PM
பட்டப்பகலில் வீட்டில் தனியாக மூதாட்டியிடம் நைசாகப் பேசி, 80 சவரன் நகையை பெண் ஒருவர், களவாடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள, மண்மலை பகுதியினை சேர்ந்தவர் சேகர். இவர், அரசுப் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இதேபோல், இவரது மனைவி மகேஸ்வரியும், அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் வேலைக்கு சென்றுவிட, எப்போதும் சேகரின் 75 வயதான தாயார், வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், இதனை நோட்டமிட்டு வந்த பெண் ஒருவர், கடந்த வியாழக்கிழமை அன்று, உறவினர் போல் அறிமுகப்படுத்திக்கொண்டு, மூதாட்டியிடம் பேச்சு கொடுத்துள்ளார்.
உங்கள் மருமகள் கேஸ் சிலிண்டர் வாங்கி வைக்கும்படி கூறியதாகச் சொல்லி, தந்திரமாகப் பேசி பீரோ சாவியை வாங்கியுள்ளார் அந்தப் பெண். பின்னர் பீரோவிலிருந்து சுமார் 80 சவரன் நகைகளை சுருட்டிக் கொண்ட அந்தப் பெண், கொஞ்சநேரம் கழித்து வருவதாகக் கூறிவிட்டு நகைகளுடன் மாயமாகி விட்டார். பின்னர் மாலை வீட்டிற்கு திரும்பிய மருமகள் மகேஸ்வரி, பீரோவில் இருந்த நகைகள் காணததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அதன்பிறகு பெண் ஒருவர் நகைகளை கொள்ளையடித்துப் போனதை அறிந்த மகேஸ்வரி, இதுகுறித்து செங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.