'முதலிரவை வீடியோ எடுத்த கணவன்'...'இத பண்ணலனா வீடியோவ லீக் பண்ணிடுவேன்'... ஆடிப்போன மனைவி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jul 25, 2019 02:04 PM

முதலிரவை வீடியோ எடுத்து வைத்து விட்டு, 10 லட்சம் கேட்டு மிரட்டிய கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.

30-year-old engineer arrested for voyeurism and dowry in Arani

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்த கண் மருத்துவர் ஷ்யாமளா. தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வரும் இவருக்கும், ஆந்திரா மாநிலம் சித்தூர் தூர்கா நகரை சேர்ந்த சத்தியநாராயணா என்ற என்ஜினீயருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து கணவனின் வீட்டிற்குச் சென்ற ஷ்யாமளா கணவருடன் குடும்பம் நடத்தி வந்தார்.

இதனிடையே கணவர் அவ்வப்போது ரகசியமாக வீடியோ ஒன்றை பார்ப்பதை கண்ட ஷ்யாமளா, அது என்ன என்பதை அறிந்து கொள்வதற்காக கணவருக்கு தெரியாமல் அவரது செல்போனை எடுத்து பார்த்துள்ளார். அப்போது அவர் கண்ட காட்சி அவரை அதிரச் செய்துள்ளது. கணவருடன் ஷ்யாமளா இருந்த முதலிரவு காட்சிகளை கணவர் சத்தியநாராயணா, அவருக்கு தெரியாமல் வீடியோ எடுத்து வைத்துள்ளார்.

இதையடுத்து கணவருடன் சண்டையிட்ட ஷ்யாமளா, அந்த வீடியோவை டெலிட் செய்யுமாறு கேட்டுள்ளார். ஆனால் சத்தியநாராயணா அதற்கு மறுப்பு தெரிவிக்க பிரச்சனை பெரிதானது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சத்தியநாராயணா ஷ்யாமளாவை ஆபாசமாக பேசி சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் மனமுடைந்த ஷ்யாமளா தன் பெற்றோரிடம் எல்லாவற்றையும் சொல்லி அழுதுள்ளார்.

இதனைத்தொடர்ந்து சத்திய நாராயணாவிடம் பேசிய ஷ்யாமளாவின் பெற்றோர், நடந்ததை எல்லாம் மறந்து விட்டு ஒழுங்காக குடும்பம் நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்கள். ஆனால் அவர்களையும் ஆபாசமாக பேசி பிரச்சனை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதற்கு மேல் தங்களது மகளின் வாழ்க்கை நன்றாக இருக்காது என்பதை உணர்ந்த ஷ்யாமளாவின் பெற்றோர், மகளுடன் குடும்பம் நடத்தாவிட்டால், வரதட்சனையாக கொடுத்த 75 சவரன் நகை, சீர்வரிசைகளை திருப்பி கொடுக்குமாறு கேட்டுள்ளார்கள்.

ஆனால் கொடுத்தது எதையும் திருப்பி கொடுக்க முடியாது எனவும், உங்கள் மகளுடன் மீண்டும் வாழ வேண்டுமென்றால் மேற்கொண்டு 10 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். அதோடு கேட்ட பணத்தை கொடுக்கவில்லை என்றால் முதலிரவு வீடியோவை வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார்.

சத்திய நாராயணாவின் மிரட்டலை அடுத்து பெண் டாக்டர் ஷ்யாமளா மற்றும் அவரது பெற்றோர் ஆரணி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்கள். இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சத்தியநாராயணாவை கைது செய்து, ஆரணி கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் ஜெயிலில் அடைத்தனர். கணவனே மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் விடியோவை எடுத்து வைத்து விட்டு, பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பலரையும் அதிர செய்துள்ளது.

Tags : #ATTACKED #SEXUALABUSE #VOYEURISM #DOWRY #HUSBAND #ARANI