'மனைவியை அம்போ என விட்டு சென்று'... 'திருநங்கையுடன் குடித்தனம்' ...'டிக் டாக்' மூலம் சிக்கிய கணவர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Jul 02, 2019 03:39 PM
மனைவி 2 பெண் குழந்தைகளை தவிக்க விட்டு சென்று, திருநங்கையுடன் குடும்பம் நடத்தி வந்த நபரை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
விழுப்புரம் அடுத்து வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயப்பிரதா. இவரும் கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரும், கடந்த 2013-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு வேலை நிமித்தமாக வீட்டை விட்டு சென்ற சுரேஷ் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் தனது கணவரை பற்றி எந்த தகவலும் இல்லாததால் காவல்துறையில் புகார் அளித்தார்.
இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கடந்த 3 ஆண்டுகளாக சுரேஷை தேடி வந்தனர்.இந்நிலையில் டிக் டாக் வலைதளத்தில் காணாமல் போன சுரேஷ் போன்ற நபர் திருநங்கையுடன் ஜோடியாக வீடியோ போட்டிருப்பதாக ஜெயப்பிரதாவின் உறவினர் ஒருவர் பார்த்து விட்டு அந்த வீடியோவை ஜெயப்பிரதாவிடம் காட்டியுள்ளார். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அதிலிருப்பது தனது கணவர் சுரேஷ் தான் என்பதை உறுதி செய்தார்.
இதையடுத்து இந்த தகவலை விழுப்புரம் தாலுகா காவல் ஆய்வாளர் ராஜன் மற்றும் உதவி ஆய்வாளர் பிரகாஷிடம் ஜெயபிரதாவின் உறவினர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து விழுப்புரம் திருநங்கை அமைப்பைச் சேர்ந்த திருநங்கைகளிடம் விசாரித்த காவல்துறையினர், வீடியோவில் இருப்பது ஓசூரில் இருக்கும் திருநங்கை என்பதை கண்டுபிடித்தனர். உடனே ஓசூர் சென்ற காவல்துறையினர், அங்கு சுரேஷ் திருநங்கையை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவதை அறிந்து கொண்டனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், ''ஓசூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்த சுரேஷ், அங்கிருந்த சில திருநங்கைகள் உடன் ஏற்பட்ட பழக்கத்தினால், திருநங்கை ஒருவரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்ததாக தெரிவித்துள்ளார்''. இதையடுத்து அங்கு இருந்து சுரேஷை மீட்டு வந்த காவல்துறையினர், மனைவி ஜெயபிரதாவிடம் சேர்த்து வைத்தனர்.