‘வெடித்து சிதறிய கார் டயர்’... ‘நொடியில் நடந்த கோர விபத்து’... ‘பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Jul 25, 2019 01:47 PM
டயர் வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்த கார், நீதிமன்ற நுழைவு வாயில் முன்பு நின்றவர்கள் மீது மோதிய கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பார்ப்போரை பதறவைத்துள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி - தேனி சாலையில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆண்டிப்பட்டியை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர், தனது காரில் தேனி நோக்கி சென்றுள்ளார். அப்போது நீதிமன்ற நுழைவு வாயிலின் முன்பாக காரின் முன் பக்க டயர் திடீரென வெடித்துள்ளது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிர்பாராவகையில், காரின் முன்புறம், இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மீது மோதி தூக்கி வீசியது.
மேலும் அதைத் தொடர்ந்து வலது புறத்தில் இருந்த நீதிமன்ற பலகையின் மீதும் மோதி உடைத்ததோடு, நுழைவு வாயிலில் நின்றிருந்த இருவர் மீதும் பயங்கரமாக மோதி தூக்கி வீசியுள்ளது. இதில் காயம்பட்ட அனைவரும் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் கார் மோதிய அந்தப் பெண்ணின் கால் பலத்த சேதமடைந்துள்ளது. விபத்து நடந்து 4, 5 நாட்கள் ஆனநிலையில், ஆண்டிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கோர சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள், தற்போது வெளியாகியுள்ளன.