'கப்பலில்' வேலை இருக்கு வர்றியா... '30 லட்சம்' ரூபாயை தூக்கிக் கொடுத்த 'இளைஞர்கள்'... சுடச்சுட அல்வா கொடுத்த 'கன்சல்டன்சி ஓனர்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Feb 12, 2020 06:12 PM

கப்பலில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞர்களிடமிருந்து 30 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு ஏமாற்றியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

30 lakh rupee loot claiming to work in a ship

திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை பகுதியைச் சேர்ந்த முத்து முகம்மது என்பவர் சென்னையில் டான் கன்சல்டன்சி என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் வேளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக இணையத்தில் விளம்பரம் செய்துள்ளார்.

இதைப்பார்த்து ஏமாந்த திண்டுக்கல், கன்னியாகுமரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கடந்த ஆண்டு 30 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் லண்டனில் உள்ள கப்பல் ஒன்றில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். வேகு நாட்கள் ஆகியும் அவர் பதில் ஏதும் தெரிவிக்காத நிலையில், இளைஞர்கள் அவரிடம் வேலை குறித்து கேட்டுள்ளனர்.

இதையடுத்து கடந்த மாதம் அவர்களுக்கு கப்பல் வேலைக்குரிய ஆஃபர் லெட்டரை முத்து முகம்மது கொடுத்துள்ளார். இளைஞர்களும் சந்தோஷமாக வாங்கிச் சென்று அவற்றை இணையத்தில் சரிபார்த்தபோது அவை போலி என்பது தெரியவந்தது.

ஆத்திரமடைந்த இளைஞர்கள் இதுகுறித்து முகம்மதுவிடம் கேட்டுள்ளனர்.  அதற்கு தவறான ஆஃபர் லெட்டர் இவர்களுக்கு வந்து விட்டதாகவும், இளைஞர்களை உக்ரைனுக்கு அனுப்ப ஏற்பாடு செய்வதாகவும் அவர் கூறியுள்ளார். சிறிது நாட்கள் பொறுத்திருந்த இளைஞர்கள் மீண்டும் தொடர்பு கொண்ட போது அவரது செல்போன் ஸ்விட்ச்ஆஃப் என வந்துள்ளது.

இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் கடந்த திங்கள்கிழமை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேலிடம் புகார் அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Tags : #DINDIGUL #CHENNAI #LOOT #SHIP JOB #30 LAKH RUPEES