“உனக்குதான் யாரும் இல்லையே? எதுக்கு பென்சன் பணம்?”.. ‘நண்பனுடன் சேர்ந்து ‘19 வயது இளைஞர்’ செய்த ‘நடுங்க வைக்கும்’ சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Feb 12, 2020 08:52 AM

ஆவடியை அடுத்த கன்னபாளையம் ஒத்தவாடை தெருவைச் சேர்ந்தவர் 56 வயதான மல்லிகா. இவரது கணவர் பார்த்தசாரதி ஓய்வு பெற்ற ராணுவ வீரராக கொஞ்ச காலம் இருந்து, பின்னர் இறந்துவிட்ட நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்த மல்லிகாவை கடந்த 7ஆம் தேதி மல்லிகாவின் உறவினர் மீனாட்சி என்பவர் சந்திக்க வந்துள்ளார்.

TN youth murders his grandmother for pension money

அப்போது மல்லிகா இறந்த நிலையில் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ந்த மீனாட்சி காவல்துறைக்கு அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்து விசாரித்த காவல்துறையினர், மல்லிகாவின் கழுத்திலிருந்த சங்கிலி, கம்மல், மூக்குத்தி உள்ளிட்ட 15 பவுன் நகைகளும், வீட்டில் இருந்த 30 ஆயிரம் ரொக்க பணமும் திருடப்பட்டதைக் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து மல்லிகாவின் சடலத்தை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், இவ்வழக்கு குறித்து விசாரித்ததில் செங்குன்றம் அடுத்த ரெட்டேரி பாரதி தெருவைச் சேர்ந்த கோகுல்(19) மற்றும் சென்னை பட்டாளம் போகிப்பாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இவர்கள் இருவரையும் விசாரித்தபோதுதான் மேலும் அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தன. அதன்படி மல்லிகாவின் அக்காள் லோகேஸ்வரி மகள் ப்ரியாவின் மகனான 19 வயது கோகுல் என்பவர்,  கடந்த 6- ஆம் தேதி இரவு மல்லிகாவின் வீட்டிற்கு வந்துள்ளார். அவர் மல்லிகாவிடம், “உனக்குதான் யாருமே இல்லையே? பென்ஷன் பணத்தை வைத்துக்கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய்? எனது அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்த பணத்தை கொடுத்தால் என்ன?” என்று வாக்குவாதம் செய்துள்ளார்.

ஆனால் மல்லிகா பணத்தை தர மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கோகுல் தனது 17 வயது நண்பனுடன் சேர்ந்து மல்லிகாவின் கழுத்தை நெரித்தும், சுவற்றில் மோதி அடித்தும் கொன்றுள்ளார்.  மல்லிகா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் விசாரணையில் இவற்றை ஒப்புக்கொண்ட இந்த சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த ஆவடி போலீஸார் கோகுலை சிறையில் அடைத்தனர். கோகுலின் நண்பனான 17 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

Tags : #CHENNAI