‘தாத்தா வீட்டுக்கு சென்ற’... ‘3 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்’... கதறித் துடிக்கும் பெற்றோர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Oct 30, 2019 05:28 PM

பண்ருட்டி அருகே புதிதாக தோண்டப்பட்ட பள்ளத்தில், தேங்கிய தண்ணீரில் தவறி விழுந்து, 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

3 year old girl died after falling into a drainage ditch

விழுப்புரம் மாவட்டம் கப்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் விவசாயியான மகாராஜா - பிரியா தம்பதியினர். இவர்களுக்கு அஷ்விதா (வயது 5), பவளவேணி (3), ரீபிகா (10 மாதங்கள்) ஆகிய 3 பெண்குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்காக, கடலூர் மாவட்டம் பண்டரக்கோட்டையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு செல்ல முடிவு செய்து, 3 குழந்தைகள் மற்றும் கணவருடன் பிரியா சென்றுள்ளார். அங்கு அவர்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடியநிலையில், கடந்த செவ்வாய்கிழமையன்று மாலை, பிரியாவின் தந்தை கண்ணனுக்கு, திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது.

இதனால் அங்குள்ள மருத்துவமனைக்கு தன் தந்தையை, பிரியா மற்றும் அவரது கணவர் அழைத்து சென்றனர். அப்போது தனது குழந்தைகளை அருகில் உள்ள உறவினர் வீட்டைச் சேர்ந்த செல்வி என்பவரிடம் பிரியா விட்டு விட்டு சென்றதாகக் கூறப்படுகிறது. செல்வி வீட்டில் விளையாடி கொண்டிருந்த சிறுமி பவளவேணி, தன்னந்தனியாக தன் பாட்டி வீட்டுக்கு நடந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், அந்தப் பகுதியில் லட்சுமி என்பவர் கட்டிவரும் புதிய வீடுக்காக,  கழிவுநீர் தொட்டி அமைப்பதற்கு 5 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டிருந்தது.

அந்தப் பள்ளத்தில் தேங்கி நின்ற மழைநீரில், நடந்து வந்த சிறுமி பவளவேணி, தவறி விழுந்து உயிரிழந்தார். இரவு 7 மணி அளவில் மருத்துவமனையிலிருந்து வந்த பிரியா, தனது உறவினர் வீட்டில் குழந்தை இல்லாததால், அதிர்ச்சியடைந்து எல்லா இடங்களிலும் தேடியுள்ளார். அப்போது பள்ளத்தில் இருந்த தண்ணீரில் பவளவேணி பிணமாக கிடப்பதை பார்த்து கதறி அழுதார். இது குறித்து தகவல் அறிந்தது வந்த போலீசார், குழந்தையின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #DIED