'பிஞ்சு குழந்தைய பாக்க ஆசையா இருந்தாரு'....'தாய்க்கும் சிசுவுக்கும் நேர்ந்த கொடூரம்'...உறைந்து நின்ற கணவர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Sep 05, 2019 12:37 PM

தவறான சிகிச்சையால் தாயும், பிறந்த குழந்தையும் உயிரிழந்ததாக குற்றசாட்டு எழுந்த நிலையில், அவர்களை அவசர அவசரமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mother and Just born baby died due to wrong treatment in Nagercoil

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே ஆற்றூரைச் சேர்ந்தவர் விஜின். இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே கர்ப்பமாக இருந்த தனது மனைவி மெர்லின் திவ்யாவை பிரசவத்திற்காக மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ மிஷன் என்ற தனியார் மருத்துவமனையில் நேற்று சேர்த்துள்ளார். இதையடுத்து நேற்று காலை திவ்யாவிற்கு பிரசவ வலி ஏற்பட, அவரை மருத்துவர்கள் பிரசவ அறைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் சிறிது நேரம் கழித்து மெர்லின் திவ்யாவையும், பிறந்து சில நிமிடமே ஆன சிசுவையும் யாரிடமும் சொல்லாமல் அவசர ஊர்தியில் மருத்துவர்கள் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதனை உறவினர்கள் சிலரும் பார்த்ததாக அவர்களின் தரப்பில் கூறப்படுகிறது. அப்போது அது குறித்து உறவினர்கள் கேட்டதற்கு உயர் சிகிச்சைக்கு அனுப்பி வைப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டது என்று உறவினர்கள் கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து அவசர ஊர்தியை பின் தொடர்ந்து சென்ற உறவினர்கள் சிலர் அது 300 மீட்டர் தொலைவில் உள்ள குழித்துறை அரசு மருத்துவமனைக்கு  சென்றதாக கூறப்படுகிறது.

இதனிடையே மெர்லின் திவ்யாவை பரிசோதித்த அரசு மருத்துவர்கள், தாயும், சேயும் உயிரிழந்து விட்டதாக அரசு மருத்துவர்கள் கூறியதாக அவரது உறவினர்கள் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த திவ்யாவின் உறவினர்கள், தவறான சிகிச்சையால் தாயும் சேயும் உயிரிழந்து விட்டதாகவும் இதை மறைப்பதற்காகவே தனியார் மருத்துவமனை நாடகமாடியதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து  மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றையும் அவர்கள் அளித்தனர்.

இதற்கிடையே அனைத்து வசதிகள் இருந்தும் தாயையும், பிறந்த குழந்தையையும் அரசு மருத்துவமனைக்கு எதற்காக அனுப்பி வைக்க வேண்டும் என அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளார்கள். இந்த சூழ்நிலையில் மனைவி மற்றும் குழந்தையை காண ஆவலாக இருந்த விஜினுக்கு இது பேரதிர்ச்சியாக அமைந்தது. இதனால் அவர் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவருக்கு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags : #HOSPITAL #JUST BORN BABY #MOTHER #DIED