'இன்னையோட இந்த குடிய விடுறோம்'...'இது தான் கடைசி சரக்கு'...இப்படி சொன்னவருக்கு நேர்ந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Oct 10, 2019 12:34 PM

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த தட்டாம்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். விவசாயம் செய்து வரும் இவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் தினமும் மது குடிக்கும் கார்த்திகேயன், வீட்டிற்கு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். உறவினர்கள் எவ்வளவோ கண்டித்தும் அவர் கேட்கவில்லை.

Farmer died over consumption of alcohol in cuddalore

இந்நிலையில் கார்த்திகேயனின் நிலையை உணர்ந்த அவரது நண்பர்கள், குடியை நிறுத்த அவருக்கு யோசனை ஒன்றை வழங்கினார்கள். அதன்படி கொஞ்சிக்குப்பம் அய்யனார் கோவிலுக்கு சென்று சத்தியவாக்கு கொடுத்து கையில் மந்திரித்து கயிறு கட்டிக் கொண்டால் குடிப்பழக்கம் நின்று விடும் என்று கூறியிருக்கிறார்கள். அதற்கு கார்த்திகேயனும் சம்மதம் தெரிவித்து கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார்.

இதையடுத்துகு அய்யனார் கோவிலுக்கு புறப்பட அவர், நாளை முதல் குடிக்க மாட்டேன் என்று சத்திய வாக்கு கொடுத்து கயிறு கட்டிய பின்னர் குடிக்க முடியாது என்பதால் இன்றே ஆசை தீர குடித்து விடலாம் என எண்ணி டாஸ்மாக் பாருக்கு சென்றுள்ளார். அங்கு ஆசை தீர குடித்த கார்த்திகேயனுக்கு போதை தலைக்கு ஏறியது. இருந்தாலும் நாளை முதல் குடிக்க முடியாது என்பதால் வழக்கத்துக்கு மாறாக அதிகமாக குடித்தார்.

அதனைத்தொடர்ந்து போதையிலேயே நடந்து அய்யனார் கோவில் அருகில் சென்றார். ஆனால் பாதி வழியில் சென்ற போது அவரால் நடக்க முடியாமல் தடுமாறி கீழே விழுந்தார். இதனை கவனித்த அருகில் இருந்தவர்கள் கார்த்திகேயனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கார்த்திகேயனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனிடையே சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் கார்த்திகேயனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடியை விடுவதற்கு மனைவி மற்றும் குடும்பத்தை நினைத்து பார்த்தாலே போதுமானது. ஆனால் நாளை முதல் குடியை விடுகிறேன் என விவசாயி கார்த்திகேயன் தனது உயிரை விட்டது தான் மிச்சம்.

Tags : #CUDDALORE #DIED #ALCOHOL #FARMER