மைனர் பெண்ணின் மார்ஃபிங் படங்களை போஸ்ட் செய்த வாலிபர்.. மகிளா நீதிமன்றம் கொடுத்த தண்டனை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Apr 25, 2019 11:00 AM
சமூக வலைதளங்களில் வளரிளம் பெண்ணின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து மிரட்டி வந்ததற்காக, 22 வயது வாலிபர் ஒருவருக்கு 3 வருடம் சிறைத் தண்டனை விதித்து திருச்சி மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்த பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளி அஜித்குமார் என்பவருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகையும், அதனைக் கட்டத் தவறினால் 6 மாதம் சிறை தண்டனை நீட்டிக்கப்படும் என்றும் தீர்ப்பில் குறுப்பிடப்பட்டுள்ளது. 22 வயது கட்டடத் தொழிலாளியான அஜித் குமார் என்பவர் 17 வயது பெண் ஒருவரிடம் தன் காதலைச் சொல்லியிருக்கிறார். ஆனால் அந்த பெண் அதை ஏற்க மறுக்காததால் தொடர்ந்து அந்த பெண்ணை தொந்தரவு செய்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் வாட்ஸ்-ஆப் புகைப்படத்தை எடுத்து மார்ஃபிங் செய்து தகாத முறையில் அந்த பெண்ணை மிரட்டி, தன்னுடன் இணங்குமாறு வலியுறுத்தி வந்துள்ளார். ஆனாலும் அஜித்தை உதறித் தள்ளியுள்ளார் அந்த வளிரிளம் பெண். இதனால் ஆத்திரமடைந்த அஜித், அந்த புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து அந்த பெண் அஜித் குமார் மீது போலீஸில் புகார் அளித்ததன் பேரில், போலீஸார் விசாரணை செய்து அந்த இளைஞர் அஜித்குமாரை கைதுசெய்தனர். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்ட அஜித்குமாரின் வழக்கில் தற்போது திருச்சி மகிளா நீதிமன்றம் மேற்கண்ட தீர்ப்பினை வழங்கியுள்ளது.