'ஆண்' 'பெண்' குழந்தைகளுக்கு தனி ரேட்'...'அதிரவைத்த செவிலியர்'...பகீர் கிளப்பும் 'ஆடியோ'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Apr 25, 2019 10:28 AM

மருத்துவ துறையில் எவ்வளவோ அறிவியல் வளர்ச்சி அடைந்த நிலையிலும்,இன்னும் குழந்தையின்மை பிரச்சனைக்கு முழுமையான தீர்வினை காண முடியவில்லை. உணவு பழக்கம் மற்றும் வாழ்வியல் மாற்றங்களால் பல தம்பதியருக்கு குழந்தை பாக்கியமே இல்லாமல் போய் விடுகிறது.இவ்வாறு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கும் தம்பதியர்களுக்கு,அரசின் அனுமதியோடு குழந்தைகளை தத்து எடுத்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.ஆனால் அதில் இருக்கும் ஏராளமான சட்ட நடைமுறைகள் நடுத்தர மக்களுக்கு அவ்வளவு எளிதான ஒன்றாக இல்லை.

Namakkal nurse selling babies for past 30 years

இந்த சந்தர்பத்தினை பயன்படுத்தி சட்டத்திற்கு புறம்பான வகையில் குழந்தைகளை சிலர் தத்து எடுத்து வருகின்றனர்.இதற்காகவே ஒரு கும்பல் செயல்பட்டு வரும் அதிர்ச்சி தகவலை 'புதிய தலைமுறை' வெளியிட்டுள்ளது.ஏழை வீட்டில் பிறக்கும் குழந்தைகள் முதற்கொண்டு,சிறு வயதில் தவறான தொடர்பினால் பிறக்கும் குழந்தைகளை இடைத்தரகர்கள் விலைக்கு வாங்கி,அதனை குழந்தை  இல்லாத தம்பதியர்களுக்கு அதிக விலைக்கு விற்கும் அதிர்ச்சி சம்பவம் நடைபெற்று வருகிறது.இது போன்று நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நடந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ராசிபுரத்தை சேர்ந்தவர் அமுதா.செவிலியராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற அவர்,கடந்த 30 வருடங்களாக குழந்தைகளை வாங்கி விற்கும் இடைத்தரகர் தொழிலில் ஈடுபட்டு வந்தது தற்போது தெரியவந்துள்ளது.குழந்தைகளின் நிறம் மற்றும் எடையினை வைத்தே குழந்தையின் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.ஆண் குழந்தை என்றால் குறைந்தபட்சம் ரூ. 4 லட்சம் வரையிலும், பெண் குழந்தை என்றால் ரூ.3 லட்சம் வரையிலும் விற்கப்படுகிறது.  தரகராக செயல்படும் செவிலியர் அமுதா ஒரு தம்பதிகளிடம் பேசிய ஆடியோ வெளியாகி, தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஆடியோவில் 30 ஆயிரம் கொடுத்து முன்பதிவு செய்துகொண்டு நேரில் வந்து குழந்தையினை பார்த்து எடுத்து கொள்ளலாம் என,அந்த பெண் கூறுகிறார்.பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஆடியோ விவகாரத்தில் தொடர்புடைய கும்பல் வெளி மாநிலங்களிலிருந்தும் குழந்தையினை கடத்தி கொண்டு வந்து விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு இந்த கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.

Tags : #NAMAKKAL #NURSE #BABIES #SELL INFANT CHILD