2-வது திருமணத்திற்கு 'இடையூறாக' இருந்த... 2 மாத 'குழந்தை' கொலை... மர்மம் இருப்பதாக 'கணவர்' புகார்... டிவிஸ்ட்க்கு மேல் டிவிஸ்ட்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்2-வது திருமணத்திற்கு இடையூறாக இருந்த 2 மாத பெண் குழந்தையை பெற்ற தாயே கொலை செய்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்தவர் கணேசன்(35) இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பாபநாசம் பகுதியை சேர்ந்த பைரோஸ்பானு என்னும் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தையும், 2 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் இருந்தது. திருமணத்துக்கு பின் இருவரும் பாபநாசம் அருகிலேயே வசித்து வந்தனர். சம்பவ தினத்தன்று கணேசன் தன்னுடைய சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு சென்றிருந்தார்.
அப்போது போனில் பேசிய அவரது மனைவி தங்களுடைய 2 மாத பெண் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கணேசன் வீட்டிற்கு திரும்பி தன்னுடைய மகள் சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் புகாரளித்தார். இதையடுத்து அந்த பெண் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கழுத்தை நெரித்து அந்த பெண் குழந்தை கொலை செய்யப்பட்ட விவரம் வெளியானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. திருபுவனத்தை சேர்ந்த முகமது தல்கா என்பவருக்கு பைரோஸ் பானுவை மறுமணம் செய்து வைக்க அவரது தந்தை அக்பர்அலி முடிவு செய்திருந்தார். இதற்கு இடையூறாக 2 மாத பெண் குழந்தை இருந்துள்ளார். இதனால் அந்த குழந்தையை கொலை செய்ய அக்பர் அலி, அவரது மனைவி மதீனா பீவி(47), தாய் பைரோஸ் பானு(28), அக்பர் அலி நண்பர் முகமது தல்கா(46) ஆகிய 4 பேரும் திட்டம் தீட்டினர். தொடர்ந்து கழுத்தை நெரித்து அந்த குழந்தையை கொலை செய்தனர்.
விசாரணையில் நால்வரும் உண்மையை ஒப்புக்கொண்டதை அடுத்து அவர்கள் நால்வரையும் பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் அவர்களை அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
