#WATCH #VIDEO: அசுர வேகத்தில் வந்த... தனியார் பொறியியல் கல்லூரிப் பேருந்துகள்... நேருக்கு நேர் மோதியதில்... அலறித் துடித்த மாணவ, மாணவிகள்... பதறவைக்கும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Jan 07, 2020 11:08 AM
நாகர்கோவில் அருகே இரண்டு தனியார் கல்லூரிப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், 18 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, ராஜாக்கமங்கலத்தில் இருந்து வெள்ளிச்சந்தை நோக்கி, தனியார் மகளிர் பொறியியல் கல்லூரிப் பேருந்து ஒன்று, நேற்று காலை 8.30 மணியளவில் மாணவிகளை ஏற்றிக் கொண்டு சென்றுக் கொண்டிருந்தது. அதேபோல், பேயோட்டில் இருந்து மற்றொரு தனியார் பொறியியல் கல்லூரிப் பேருந்து, மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு, ராஜாக்கமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது சூரப்பள்ளம் என்ற இடத்தில், இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இதில் பேருந்தில் இருந்த மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் அலறித் துடித்தனர். இரண்டு தனியார் பொறியியல் கல்லூரிப் பேருந்துகளில் இருந்த சுமார் 18 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர். பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த இடத்தில், இந்த விபத்து நடந்ததால், காவல்துறைக்கு தகவல் தெரிவித்த அவர்கள், மாணவ, மாணவிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
காயமடைந்து மீட்கப்பட்ட மாணவ, மாணவிகள் அங்குள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குறுகிய சாலையில் இரண்டு பேருந்துகளுமே அதி வேகத்தில் வந்தது தெரிய வந்துள்ளது. இந்த விபத்தின் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பதறவைத்துள்ளது.
