தனியார் ‘சொகுசு’ பேருந்தும் காரும்... ‘நேருக்கு நேர்’ மோதி கோர விபத்து... சில ‘நொடிகளில்’ நடந்து முடிந்த ‘பயங்கரம்’...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Jan 05, 2020 03:56 PM

தனியார் சொகுசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்ததில் உடல் கருகி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Karnataka Fire Accident 3 Died In Private Bus Car Collision

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் தொட்டகுனி அருகே நேற்று அதிகாலை 2 மணியளவில் தனியாருக்கு சொந்தமான சொகுசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென அந்த பேருந்தும் எதிரே வந்த கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த பயங்கர விபத்தில் பேருந்து மோதியதும் கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. '

இதையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் உடனடியாக கீழே இறங்கிவிட, அருகிலிருந்தவர்கள் காருக்குள் சிக்கியவர்களை மீட்க முயற்சித்துள்ளனர். ஆனால், காரில் பற்றிய தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அவர்களால் காருக்குள் இருந்தவர்களை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. இதற்கிடையே காரில் பற்றிய தீ வேகமாக பேருந்துக்கும் பரவத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்துள்ளனர். இந்த கோர விபத்தில் காருக்குள் இருந்த சரசம்மா (65), வசந்தகுமார் (55), ராமய்யா (55) ஆகிய 3 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் தீக்காயம் அடைந்த 4 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், என்.ஒசஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சரசம்மா என்பவரை  அவருடைய குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இந்த விபத்து நடந்தது தெரியவந்துள்ளது. மேலும் பேருந்தில் இருந்த பயணிகள் வேகமாக கீழே இறங்கியதால் அவர்கள் அதிருஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும் கூறப்பட்டுள்ளது.