"செல்போனுக்காக சண்டையிட்ட நண்பர்கள்!"... "கொலையில் முடிந்த கொடூரம்"... "திருச்சியில் பரபரப்பு"...
முகப்பு > செய்திகள் > தமிழகம்தன்னுடைய விலையுயர்ந்த செல்போனுக்காக நண்பனை கொன்ற சம்பவம் திருச்சியில் அரங்கேறியுள்ளது.

திருச்சி மாவட்டம் பாலக்கரை அடுத்த மரக்கடை பகுதியில் உள்ள மாநகராட்சி கழிவறையில், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அது குறித்து, காவல் துறை மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதில், கொலை செய்யப்பட்டவர், தில்லை நகரைச் சேர்ந்த 21 வயதான முகம்மது இசாக் என்பது தெரியவந்துள்ளது. அவருக்கு பாலக்கரை குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்த நாகூர் அனிபா என்ற 16 வயது சிறுவனுடன் நட்பு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், இசாக் கொலை தொடர்பாக, விசாரணை நடத்திய போலீசார், கொலை நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, பொது கழிவறையிலிருந்து வெளியேறி இளைஞர் ஒருவர் நடந்து செல்லும் காட்சிகள் இருந்துள்ளன.
இதைத் தொடர்ந்து, இசாக்குடன் சுற்றித் திரியும் சிறுவன் நாகூர் அனிபாவிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது, இசாக்கின் கழுத்தை அறுத்து கொலை செய்ததை அச்சிறுவன் ஒப்புக் கொண்டுள்ளான்.
நாகூர் அனிபாவின் தாய், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அவர் ஊருக்குத் திரும்பியபோது, மகனுக்காக விலையுயர்ந்த செல்போன் ஒன்றை வாங்கி வந்துள்ளார். அந்த செல்போனை, இசாக் அடித்து பறித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால், கோபத்தில் இருந்த நாகூர் அனிபா, இசாக்கை மது அருந்த அழைத்துச் சென்று, கழிவறையில் வைத்து, கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
