'காதலில் ஊடலா? நீங்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை'
முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்By Manishankar | Jan 09, 2020 02:14 PM
சண்டையிடாத காதல் ஜோடிகள் உலகத்தில் உண்டா? நிச்சயமாக இல்லை. எல்லா உறவுகளிலும் சண்டை வருவது இயல்பு தான். ஆனால், பல நேரங்களில் சண்டைகள் மனக்கசப்பையும், நீடித்த வலியையும் ஏற்படுத்தும் வடுக்கள் ஆகிவிடுகின்றன. சண்டை வரும் சமயம், நாம் சிலவற்றைத் தவிர்த்து, சிலவற்றைச் செய்தால் அந்த அன்பும் நேசமும் முறிந்துவிடாமல் நிலைத்திருக்கும்.

நம் பிரியமானவர்களிடம் சண்டையிடும் போது, அந்த சண்டை தற்காலிகமானதாக இருக்க வேண்டியது அவசியம். அந்த சண்டை ஒருவரின் மீது மற்றொருவர் வைத்திருக்கும் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் வலுப்படுத்தும் விதமாக அமைய வேண்டும்.
செய்யவேண்டியவை: உங்கள் பக்கம் என்ன தான் நியாயம் இருந்தாலும், உங்கள் காதலரின் கருத்தைப் பொறுமையாக கேளுங்கள். நீங்கள் அவர் மீது வைக்கும் விமர்சனம், அவரின் நற்குணங்களை மேம்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். அந்த சண்டையை விட அவரின் அன்பும் உறவும் உங்களுக்கு முக்கியமானதென அவருக்குப் புரிய வேண்டும். ஒருவேளை நீங்கள் சண்டையைத் தொடங்கியிருந்தால், அது முற்றிலும் அவசியம் தானா என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். உதாரணமாக, உங்கள் அலுவலகக் கோவத்தை உங்கள் காதலரிடம் காட்டுவதைத் தவிர்க்கவும். இருவருக்கும் கோவம் தணிய சில நாட்கள் கூட ஆகலாம். ஆனால், உங்கள் துணைவரை சமாதானம் செய்ய நீங்கள் கண்டிப்பாக முயற்சி செய்ய வேண்டும்(உங்கள் மீது தவறு இல்லையென்றாலும் கூட).
செய்யக்கூடாதவை: வரம்பு மீறி கொச்சையாகப் பேசுவதை உறுதியாக தவிர்க்க வேண்டும். அடிக்கவோ, துன்புறுத்துவோ கூடாது. அது அவரை பயமுறுத்துவதோடு, உங்களின் மீதான மதிப்பையும் குறைத்துவிடும். சண்டையின் போது வரும் எந்த கேள்விக்கும், நீங்கள் பதில் கூற மறுக்கக்கூடாது. சண்டையைப் பெரிது படுத்த விரும்பாது, பதிலளிக்காமல் உறங்கச் செல்லக்கூடாது. முழுமை பெறாத சண்டைகளுக்குப் பின் வரும் தூக்கம், நம் நினைவில் இருந்து நீங்காமல் கசப்பான எண்ணங்களைத் தூண்டுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
