'ஃபேஸ்புக் காதல்'...'முதல் சந்திப்பிலேயே 'பிரேக்அப்' சொன்ன காதலன்'... 'காதலி' போட்ட கொடூர பிளான்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Nov 29, 2019 04:39 PM
ஃபேஸ்புக் வழியாக மலேசியப் பெண்ணைக் காதலித்த ஐ.டி இளைஞரைக், கூலிப்படையை வைத்து அவரது காதலியே கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே உள்ள காட்டுநாயக்கன்பட்டி நேரு என்பவரின் மகன் அசோக்குமார். ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவருக்கு, முகநூல் வழியாக மலேசியாவைச் சேர்ந்த அமுதேஸ்வரி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் நட்பாக தொடங்கிய இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில், அசோக்குமாரை பார்ப்பதற்காக அமுதேஸ்வரி தேனி வந்துள்ளார்.
இதனிடையே இதுநாள் வரை அமுதேஸ்வரிவை நேரில் பார்க்காமல் காதலித்து வந்த அசோக் குமார், அவரை முதல் முறையாக நேரில் பார்த்ததும், நீ குண்டாக இருக்கிறாய். அழகாக இல்லை' எனேவ நாம் பிரிந்து விடலாம் என கூறியுள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அமுதேஸ்வரி, அதிர்ச்சியில் உறைந்து போனார். அசோக் குமாரை சமாதானபடுத்த முயற்சித்து எந்த பலனும் இல்லாமல், மலேசியாவுக்குத் திரும்பிச் சென்றார். அங்கிருந்து அசோக் குமாரிடம் அவர் பேச முயற்சித்த போது, இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டு அமுதேஸ்வரியின் தொடர்பைத் துண்டித்துள்ளார் அசோக்குமார்.
இந்நிலையில் திடீரென ஒரு நாள் அசோக் குமாருக்கு ஒரு போன் கால் வர, அதில் கவிதா அருணாசலம் என்ற பெயரில் அசோக் குமாரிடம் பேசிய பெண், `நான் அமுதேஸ்வரியின் அக்கா. நீ ஏமாற்றியதால் அவள் தற்கொலை செய்துகொண்டாள்' என்றும் கூறியுள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அசோக் குமார், தன்னை விட்டு விடும்படி கெஞ்சியுள்ளார். அதற்கு அந்த பெண் `நான் தேனி வருகிறேன். என்னை நேரில் சந்தித்து மன்னிப்புக் கேள்' எனக் கூறியிருக்கிறார்.
இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் அந்தப் பெண் தேனி வந்துள்ளார். பின்னர், தனியார் விடுதிக்கு அசோக்குமாரை வரச்சொல்லியிருக்கிறார். அங்கு சென்ற அசோக் குமாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம், அங்கு இருந்தது இறந்துவிட்டதாகக் கூறப்பட்ட அமுதேஸ்வரி. இதையடுத்து இருவருக்கும் மீண்டும் பிரச்சனை எழ, தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால், என்னுடைய சாவுக்கு நீ தான் காரணம் என எழுதி வைத்துவிட்டு, நான் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்து போன அசோக் குமார், தேனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். சம்பந்தப்பட்ட அமுதேஸ்வரியை அழைத்துப் போலீஸார் விசாரணை நடத்தியதில், அப்பெண்ணின் உண்மையான பெயர் விக்னேஸ்வரி என்பது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து இருவரையும் சமாதனம் செய்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். ஆனால் திடீரென அசோக்குமாரின் வீட்டுக்குச் சென்ற அப்பெண், தனக்கும் அசோக்குமாருக்கும் திருமணம் செய்துவைக்கும்படி கூறியுள்ளார்.
இதை அசோக்குமாரின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் கோபமடைந்த அந்தப் பெண், தன்னை ஏமாற்றிய அசோக்குமார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வீரபாண்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதோடு `அசோக் மீது வழக்கு பதிவு செய்தால்தான் மலேசியா செல்வேன்' என அந்தப் பெண் பிடிவாதமாகக் கூறியுள்ளார். முடிவில் அசோக் குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் சமாதனம் அடைந்த விக்னேஷ்வரி, மலேசியா கிளம்பி சென்றார்.
இவ்வளவு தூரம் வந்து காதலன் மீது வழக்கு பதிவு செய்தால் தான் திரும்பி செல்வேன் என அந்த பெண் கூறியதால், நிச்சயம் அவர் எதற்கும் துணிவார் என்ற சந்தேகத்தில் அந்த பெண்ணை தங்களின் கண்காணிப்பு வளையத்தில் காவல்துறையினர் வைத்திருந்தார்கள். இதற்கிடையே இன்று போடி நகர் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாகச் சுற்றித்திருந்த சிலரை பிடித்துப் போலீஸார் விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள் கூறிய தகவல் காவல்துறையினரை அதிர்ச்சி அடைய செய்தது.
கூலிப்படையைச் சேர்ந்த அவர்கள், காட்டுநாயக்கன்பட்டியைச் சேர்ந்த அசோக்குமாரை கொலை செய்ய வந்ததும், மலேசியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் அதற்கு பணம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்கள். ஏற்கனவே அந்த பெண்ணை காவல்துறையினர் தங்களின் கண்காணிப்பு வளையத்தில் வைத்திருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக காவல்துறையினர் கூறினர். மலேசியாவில் இருக்கும் அவருக்கு, யார் கூலிப்படையை ஏவ உதவி செய்தார் என்ற கோணத்தில் காவல்துறையினர் தங்களது விசாரணையை தொடர்ந்து வருகிறார்கள்.