கல்யாணத்திற்கு சென்ற ஒட்டு மொத்த குடும்பம்... அத்தையுடன் தூங்கிய 5 குழந்தைகள்... நள்ளிரவில் நடந்தேறிய கொடூரம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | Dec 31, 2019 12:13 AM
உத்தரப்பிரதேச மாநிலத்தில் திருமணத்திற்கு ஒட்டுமொத்த குடும்பமும் செல்ல, 5 குழந்தைகள் உட்பட 6 பேர் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில், மூச்சுத் திணறால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் லோனி பகுதியைச் சேர்ந்த 5 சகோதரர்கள் 3 மாடி கட்டிடம் கொண்ட வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், சொந்த ஊரான மீரட் ஜானியில் நடக்கும் உறவினர்களின் திருமணத்துக்காக சகோதரர்கள், தங்களது குழந்தைகளை மட்டும் அத்தை பர்வீனின் பொறுப்பில் வீட்டிலேயே விட்டுவிட்டு குடும்பத்துடன் சென்றுள்ளனர். எப்போதும் தனது குழந்தைகளுடன் அந்தப் பகுதியில் உள்ள குழந்தைகளை, அங்கு வசித்து வரும் பக்கத்து வீட்டுக்காரரான முகமது சாஜித் என்பவர் அழைத்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் தனது குழந்தைகளை பள்ளிக்கு கூட்டிச் செல்ல முற்பட்ட போது, சகோதரர்கள் உள்ள வீட்டில் காலையிலிருந்து குழந்தைகள் வெளியில் வராததால் சாஜித் அங்கு சென்று பார்த்துள்ளார். வீடு உள்பக்கமாகத் தாழிடப்பட்டிருந்த நிலையில், குரல் கொடுத்தும் எந்தப் பதிலும் இல்லை. மேலும் வீட்டிற்குள் புகை மூட்டமாக இருந்ததுடன் ஏதோ எரிந்ததுபோல் வாசனை வந்துள்ளது. இதையடுத்து சந்தேகம அடைந்த அவர், அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் உள்ள பொருட்கள் எரிந்து காட்சி அளித்ததுடன், தரைத் தளத்தில் அத்தை உள்பட 5 குழந்தைகளும் உயிரிழந்த நிலையில் சடலமாக இருந்துள்ளனர். இதையடுத்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், அங்கு வந்த 6 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், நள்ளிரவில் மின்கசிவு காரணமாக வீட்டில் இருந்த பிரிட்ஜ் மற்றும் டிவியில் தீப்பிடித்துள்ளது.
இதனால் எழுந்த புகைமூட்டத்தால் காற்றே புகாதாவாறு தாழிடப்பட்ட அறையில் தூங்கியதால், மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. நல்ல தூக்கத்தில் இருந்த 5 குழந்தைகளும், அத்தையும் அப்படியே உயிரிழந்துள்ளனர். 5 முதல் 12 வயதுக்குட்பட்ட 5 குழந்தைகள் உயிரிழந்தத சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், 6 பேரின் உடல்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே மரணத்துக்கான காரணம் தெரியவரும் என்று கூறியுள்ளனர்.