‘கணவர்’ சொன்ன வார்த்தையால்... கலங்கி துடித்த ‘மனைவி’... கடைசியில் எடுத்த ‘பகீர்’ முடிவு... பதறவைத்த சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Dec 16, 2019 04:48 PM
கணவர் கடுமையாக திட்டியதால் மனமுடைந்த மனைவி, இரு குழந்தைகளை மண்ணெண்ணய் ஊற்றி எரித்துக் கொன்று தானும், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே எல்லப்பன்பேட்டையைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருக்கும், திருவாரூரைச் சேர்ந்த சிவகாமி (28) என்பவருக்கும், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தன்யாஸ்ரீ(4) என்ற மகளும், தமிழ் அமுதன்(1½) என்ற மகனும் இருந்தனர். விஸ்வநாதன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் நிலையில், சிவகாமி தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை பகல் நேரத்தில், சிவகாமி வீட்டின் படுக்கையறையின் ஜன்னல் கதவுகளில் இருந்த கண்ணாடி கதவுகள் வெடித்து சிதறியதோடு, உள்ளே இருந்து புகையும் வெளியேறியது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர், சிவகாமியின் வீட்டு கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றனர். அங்கே சிவகாமி மற்றும் அவரது இரு குழந்தைகள் உடல் மீது தீ பற்றி எரிந்து கொண்டிருந்த நிலையில், 3 பேரும் வலி தாங்க முடியாமல் அலறி கூச்சலிட்டு கொண்டிருந்தனர். உடனே அவர்களை, உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளித்தும் பயனில்லாமல், 3 பேரும் உயிரிழந்தனர்.
சம்பவம் நடந்த சிவகாமியின் வீட்டின் பெட்ரூமில், மண்ணெண்ணய் வாடை வீசியதால், தனது குழந்தைகள் மீது மண்ணெண்ணய் ஊற்றி தீ வைத்து விட்டு, சிவகாமி தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், சிங்கப்பூர் செல்வதற்கு முன் விஸ்வநாதனுக்கும், அவரது அண்ணன் மனைவி உதயா என்பவருக்கும் இடையே தவறான உறவு இருந்துள்ளது. இதனை தட்டிக் கேட்ட மனைவி சிவகாமியை, விஸ்வநாதன் கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே பிரச்சனை இருந்து வந்த நிலையில், சிங்கப்பூர் சென்ற பிறகும் விஸ்வநாதன், தனது அண்ணியுடன் ஃபோனில் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் பிரச்சனை முற்றியநிலையில், விஸ்வநாதன் சிவகாமியை ஃபோனில் தொடர்பு கொண்டு ‘உன்னை எனக்கு பிடிக்கவில்லை, நீ செத்துப்போ, நான் வேறு திருமணம் செய்துகொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். பின்னர் மறுபடியும் விஸ்வநாதன், சிவகாமியை தொடர்பு கொண்டு நீ இங்கே இருக்க வேண்டாம், வேறு எங்காவது சென்று விடு என்று தொடர்ந்து திட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதைக் கேட்டு மனமுடைந்த சிவகாமி கடந்த 13-ந் தேதி அவரது தாயாரை செல்ஃபோனில் தொடர்பு கொண்டு தனது கணவர் திட்டியதை கூறியுள்ளார். அதில், ‘மாமா என்னை செத்துப்போன்னு சொல்றாரும்மா. வீட்டை விட்டு வெளியே போயிடுன்னு சொல்றாரும்மா.
நான் எங்கம்மா போவேன். மாமா இல்லாம நான் எப்படி இருப்பேன்மா’ என்று கூறி அழுத சிவகாமியை, அவரது தாய் சமாதானம் செய்திருக்கிறார். இருப்பினும் மன உளைச்சலில் இருந்த சிவகாமி, குழந்தைகளை தீ வைத்து கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது. தனது மகள், பேரக் குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்டது தெரிந்ததும் ஓடிவந்த பெற்றோர், 3 பேரின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதது நிலைகுலையச் செய்தது. இந்த சம்பவம் குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.