'திருட்டை தடுக்க'... 'மழையில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவலருக்கு’... 'ஒரே செகண்டில்'... 'கலங்க வைத்த சம்பவம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Nov 22, 2019 11:47 AM

 திருட்டுப் போவதை தடுக்க, மழையில் குடை பிடித்தபடி ரோந்து பணியில் ஈடுபட்ட ரயில்வே காவலர், நொடியில் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

railway police man died after train hits in nagapattinam

நாகை மாவட்டம் சீர்காழி முதல் சிதம்பரம் வரை உள்ள ரயில்வே இருப்புப் பாதையை, மின்மயமாக்கும் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இந்தப் பணிகளுக்காக விலையுயர்ந்த செப்புக் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த கம்பிகள் திருடுப்போவதை தடுக்கவும், இருப்புப் பாதை பாதுகாப்பு பணிக்காகவும், ரயில்வே காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வியாழக்கிழமை அன்று இரவு, திருவண்ணாமலை ரயில்வே பாதுகாப்புப் படையில் பணியாற்றி வரும் காவலர் சையது ரஹமத் பாட்ஷா (49) என்பவர், சீர்காழி ரயில் நிலையத்தில் இருந்து, சிதம்பரம் செல்லும் இருப்பு பாதையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். எருக்கூர் அருகே ரயில் பாதையில் நடந்துசென்றபோது மழை பெய்துள்ளது. இதனால் குடைப் பிடித்துக்கொண்டு ரோந்து பணியை மேற்கொண்டு இருந்துள்ளார். அப்போது பின்னால் அந்தோதயா விரைவு ரயில், வந்துகொண்டிருந்தது.

குடைப்பிடித்திருந்ததாலும், மழையின் வேகத்தாலும், சையது ரஹமத் பாட்ஷா ரயில் வருவதை கவனிக்கவில்லை. ரயிலின் ஒலி சத்தமும் அவருக்கு கேட்கவில்லை. அப்போது அதிவேகமாக வந்த ரயில் கண் இமைக்கும் நேரத்தில் மோதியதில், சம்பவ இடத்திலேயே, காவலர் சையது ரஹமத் பாட்ஷா உயிரிழந்தார். இதையடுத்து தகவலறிந்து வந்த மயிலாடுதுறை ரயில்வே போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #DIED #TRAIN #NAGAPATTINAM