விஷேசத்திற்கு சென்றுவிட்டு... வீடு திரும்பியபோது.... லாரி மீது மோதி நேர்ந்த பரிதாபம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Dec 17, 2019 04:09 PM

திண்டிவனம் அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதி, பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

45 year old woman died in car and lorry accident near tindivanam

சென்னை பாடியை சேர்ந்தவர் ஆரோக்கியம் என்பவரது மனைவி அருள் சகாய லதா(45). இவர், கொரட்டூரைச் சேர்ந்த உறவினர் செல்வராஜ் என்பரின் மகன் ஆரோக்கியராஜ் (30), அவரது மனைவி ஜான்சி(26) மற்றும் அவர்களது குழந்தை கஜோலின்(4) ஆகியோருடன், சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து, கடந்த திங்கள் கிழமை அன்று, சென்னையில் உள்ள வீட்டிற்கு அனைவரும் காரில் திரும்பிக்கொண்டு இருந்தனர்.

காரை ஆரோக்கியராஜ் ஓட்டிய நிலையில், திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையோரம் நின்று கொண்டு இருந்த லாரி மீது நொடியில் கார் மோதியது. இதில் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்து, அப்பளம் போல் நொறுங்கியது. காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட அருள் சகாய லதா பலத்த காயத்தால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உறவினர்கள் ஆரோக்கியராஜ், அவரது மனைவி ஜான்சி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். உயிரிழந்த அருள் சகாய லதாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த  விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #ACCIDENT #DIED #CAR #LORRY