"விருப்பத்தின் பேரில் பாலியல் உறவு வைத்துக்கொண்டால்".. 'திருமணம் செய்வதாக பொய் கூறி உறவுகொண்ட நபருக்கு எதிரான வழக்கில்'.. நீதிமன்றத்தின் பரபரப்பு 'கருத்து'!
முகப்பு > செய்திகள் > இந்தியாஒடிசாவின் கோராபுட் பகுதியில், 19 வயதான பழங்குடியின இளம் பெண், கடந்த 4 ஆண்டுகளாக அஜ்யுத் குமார் என்பவருடன் பழகிய நிலையில், இவர்களுக்கு இடையே பாலியல் உறவு இருந்துவந்துள்ளது. இதனால் அப்பெண் 2 முறை கர்ப்பம் அடைந்துமுள்ளார்.

ஆனால் அஜ்யுத்குமார் கடந்த ஆண்டு தன்னை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி கொடுத்துதான் தன்னுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டதாகவும், பின்னர் கருவைக் கலைக்க 2 முறை மாத்திரை கொடுத்ததாகவும் கூறிய இளம் பெண், அஜ்யுத்குமார் மீது அளித்த பாலியல் வன்கொடுமை புகாரை அடுத்து அஜ்யுத் குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனை அடுத்து அஜ்யுத் குமாரின் ஜாமின் மனு, முதலில் கீழ்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டு, பின்னர் ஒடிசா உயர் நீதிமன்றத்தில், நீதிபதி எஸ்.கே.பனிகிரஹி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்புக்கு ஒத்துழைக்க வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மிரட்டக்கூடாது என்கிற நிபந்தனைகளோடு அஜ்யுத் குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இதனிடையே இதுபற்றி நீதிபதி கூறுகையில், “என்னதான் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி கொடுத்தாலும் இல்லாவிட்டாலும், ஆண் - பெண் இருவரும் தங்கள் விருப்பத்தின்பேரில் பாலியல் உறவு வைத்துக்கொண்டால், அது இந்திய தண்டனை சட்டப்படி பாலியல் வன்கொடுமை குற்றமாகக் கருதப்படாது” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும், பாலியல் வன்கொடுமை வழக்கை, பெண்கள் தங்கள் விருப்பத்தின்பேரில் வைத்துக்கொள்ளும் பாலியல் உறவு சம்மந்தப்பட்ட விவகாரங்களில் பயன்படுத்துவது முறையா? என்பது பற்றி விரிவான ஆய்வு நடத்துவதற்கு பரிந்துரைத்தார். அதே சமயம், இதுபோன்று ஏழை பெண்களையும், சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட பெண்களையும் திருமணம் பண்ணிக்கொள்வதாக பொய் வாக்குறுதி கொடுத்து, ஆண்களால் பாலியல் உறவுக்குள்ளாக்கப்படுவதற்கு தீர்வு காண்பதற்கு பாலியல் வன்கொடுமை சட்டங்கள் தவறி விடுவதாகவும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
