'ஆஸ்திரேலியாவில்' பிறந்த 'புது நம்பிக்கை!...' அடுத்தடுத்து 'பாஸிடிவ் தகவல்கள்...' 'கைவிடாத' விஞ்ஞானிகளின் 'உழைப்பு...'
முகப்பு > செய்திகள் > உலகம்ஆஸ்திரேலியாவில் இருக்கும் அமெரிக்க பயோ டெக்னாலாஜி நிறுவனம் ஒன்று கொரோனாவுக்கு எதிரான தடுப்பு ஊசியை 131 பேரிடம் செலுத்தி சோதித்ததில் நல்ல ரிசல்ட் கிடைத்து வருவதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, சீனா, பிரிட்டன், இஸ்ரேல் ஆகிய நாடுகள் மனிதர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தி ஆய்வு செய்து வருகின்றன. இதில் சீனா முதல் கட்ட சோதனையில் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளது. பல கட்டங்களாக சோதனை மேற்கொள்ளப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு வருவதற்கு ஒன்றரை ஆண்டுகள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் பிரபல நோவாவேக்ஸ் மருந்து நிறுவனம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், பிரிஸ்பேன் ஆகிய நகரங்களில் 131 தன்னார்வலர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தி ஆய்வு மேற்கொண்டு வருகிறது. முதற்கட்ட சோதனையில் வெற்றிக்கான முகாந்திரம் இருப்பதாக நோவாவேக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது தடுப்பு ஊசி போட்டுக் கொண்டவர்களுக்கு பலன் அளிக்கிறதா இல்லையா என்பது வரும் ஜூலை மாதத்தில் தெரிந்துவிடும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன்பின்னர், பல்வேறு நாடுகளில் இருக்கும் தன்னார்வலர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தி சோதிக்கப்படும். பலன் கிடைத்தவுடன் நடப்பாண்டில் 100 மில்லியன் டோஸ் மருந்தும், அடுத்த ஆண்டு 1.5 பில்லியன் டோஸும் கொண்டு வர நோவாவேக்ஸ் தீர்மானித்துள்ளது.
இந்நிறுவனம் ஒரே நேரத்தில் தடுப்பு ஊசி மற்றும் நோய் வந்த பின் குணப்படுத்தும் மருந்து ஆகிய இரண்டையும் தயாரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளது. இந்த தடுப்பு ஊசி பலன் அளிக்கும் என்ற நம்புவதாக அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. பழமையான முறையில் தயாரிக்கப்படும் இந்த மருந்து இந்தாண்டு இறுதிக்குள் சந்தைக்கு கொண்டு வரப்படும் என நம்பப்படுகிறது.