சாப்ட்டு 2 நாள் ஆச்சு 'கையில' காசு இல்ல... 1600 கி.மீ 'நடந்து' போக போறோம்... போலீஸ்க்கு 'ஷாக்' கொடுத்த இளைஞர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | May 06, 2020 03:37 AM

சாப்பிட்டு 2 நாட்கள் ஆகிவிட்டன என்று வட இந்திய இளைஞர்கள் சிலர் கூறியதை கேட்ட போலீசார் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துள்ளனர்.

Lockdown: Trichy Police Helps Migrant workers from Odisha

நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை தற்போது மிகவும் பரிதாபமாக உள்ளது. சொந்த ஊருக்கு போக வாகனங்கள் இல்லாமல் நடந்தே தங்களது மாநிலங்களுக்கு செல்கின்றனர். வருமானம் இல்லாததால் பசி, பட்டினியை சமாளிப்பதும் அவர்களுக்கு பெரும்பாடாக உள்ளது. இதற்கிடையே மத்திய, மாநில அரசுகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பும் பொருட்டு பேருந்து, ரெயில்களை ஏற்பாடு செய்துள்ளன.

இந்த நிலையில் திருச்சி மாவட்டம் கொள்ளிடம் பாதை வழியாக 6 வாலிபர்கள் நடந்து செல்வதை பார்த்த போலீசார் அவர்களை அழைத்து விசாரித்து உள்ளனர். தாங்கள் அனைவரும் முசிறி பகுதியில் உள்ள உரத்தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்ததாகவும் தற்போது தொழிற்சாலை இயங்கவில்லை என்பதால் தங்களை சொந்த ஊருக்கு செல்லும்படி அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தாங்கள் வைத்திருந்த பொருட்களை சமைத்து சாப்பிட்ட வந்த இவர்கள் கையில் பணமில்லாமல் கடந்த 2 நாட்களாக சாப்பிட வழியின்றி இருந்துள்ளனர்.

அதனால் என்ன நடந்தாலும் நடந்து எப்படியாவது ஊருக்கு போய்விட வேண்டும் என்று முடிவு செய்து ஒடிசாவுக்கு நடக்க ஆரம்பித்து உள்ளனர். இதைக்கேட்ட போலீசார் பதறிப்போய், ஸ்ரீரங்கம் தாசில்தாருக்கு தகவலளித்து, அவர்களை அவரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவர்களுக்கு உணவும் வழங்கப்பட்டது. அதையடுத்து ஸ்ரீரங்கம் தாசில்தார், அந்த இளைஞர்கள் வேலை செய்த தொழிற்சாலையின் உரிமையாளரை வரவழைத்து அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை மீண்டும் முசிறிக்கே அனுப்பி வைத்தனர்.

மேலும் ஊரடங்கு முடியும்வரை அவர்களை பாதுகாப்பாக வைத்திருந்து உணவு அளிக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து போலீசாருக்கு அந்த இளைஞர்கள் நன்றி தெரிவித்து சென்றனர்.