'இன்ஸ்டாகிராம்ல அடிக்கடி கமெண்ட் பண்ணுவான்!'.. சென்னை டாக்டருக்கு காதல் வலையை விரித்து... இளைஞர் செய்த 'பகீர்' காரியம்!.. போலீஸார் அதிர்ச்சி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Apr 24, 2020 07:25 PM

சென்னையைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர், கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி-க்கு இ-மெயிலில் புகார் ஒன்றை அனுப்பினார். அதில், சென்னையில் உள்ள மருத்துவமனையில் டாக்டராகப் பணியாற்றிவருகிறேன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இன்ஸ்டாகிராமில் என்னுடைய பதிவுக்குக் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சுஜி என்பவர் கமென்ட்ஸ் பதிவிட்டிருந்தார்.

chennai doctor cheated for money through instagram

இந்தச் சமயத்தில் என்னை செல்போனில் தொடர்பு கொண்ட சுஜி, மருத்துவம் தொடர்பாக என்னிடம் பேசினார். அதற்கு நானும் பதிலளித்தேன். அதன்பிறகு இருவரும் போனில் பேசினோம். அப்போது சுஜி, தன்னை ஒரு சமூக ஆர்வலர் என்றும் பெண்ணியவாதி என்று கூறினார். என்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறினார். அந்தச் சமயத்தில் சுற்றுலாவுக்காக நான் நாகர்கோவில் சென்றிருந்தேன்.

அப்போது நானும் சுஜியும் நேரில் சந்தித்தோம். சுஜி, என்னிடம் அன்பாகவும் அக்கறையாகவும் பேசினார். நாகர்கோவிலிருந்து சென்னைக்கு நான் புறப்படுவதற்கு முன் என்னுடைய செல்போனில் தன்னுடைய வங்கி கணக்கு விவரங்களைப் பதிவு செய்தார். அதன்பிறகு என்னுடைய சம்பளம் குறித்த விவரங்களை அவர் தெரிந்து கொண்டார். நாங்கள் இருவரும் பழகிவந்தோம். அப்போது, செலவுக்காக என்னிடம் சுஜி பணம் கேட்பார். ஆன்லைனில் அவரின் வங்கி அக்கவுன்டுக்குப் பணம் அனுப்பிவைப்பேன்.

2019 மே மாதத்தில் சுஜிக்குப் பணம் அனுப்பினேன். அதன்பிறகு என்னிடம் பேசியவர், தன்னுடைய மாமாவுக்கு உடல் நலம் சரியில்லை. அதற்கு சென்னையில் சிகிச்சை பெற வேண்டும் என்று கூறினார். அதற்கான உதவிகளை நான் செய்தேன். அதன்பிறகு நாங்கள் இருவரும் வீடியோ காலில் பேசுவோம். எங்களின் எதிர்கால வாழ்க்கை குறித்து ஆலோசித்தோம். திருமணம்தான் செய்துகொள்ளப்போகிறோம் என்ற நம்பிக்கையில் சுஜி, கேட்ட பணத்தை அனுப்பினேன். இந்த வகையில் லட்சக்கணக்கான பணத்தை அவருக்கு நான் அனுப்பியுள்ளேன்.

பணத்தை வாங்கியபிறகு அவரின் நடவடிக்கைகள், பேச்சில் மாற்றம் தெரிந்தது. அதனால் பணம் அனுப்ப மறுப்பு தெரிவித்தேன். இந்தச் சமயத்தில் சுஜி குறித்து இன்னொரு அதிர்ச்சி தகவல் எனக்குக் கிடைத்தது. அதுதொடர்பாக அவரிடம் கேட்டதற்கு எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்தச் சமயத்தில் பணம் தரவில்லை என்றால் நாங்கள் இருவரும் சந்தித்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டினார். அதனால் அவரின் செல்போன் நம்பரை பிளாக் செய்தேன்.

ஆனால், வேறு வேறு நம்பர்களிலிருந்து என்னிடம் பேசினார். அப்போது பணம் தரவில்லை என்றால் புகைப்படம், வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டினார். அதன்படி இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களைப் பதிவு செய்தார். எனவே அதை அழித்துவிடுவதோடு என்னை ஏமாற்றிய பணம் பறித்த சுஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

புகாரின்பேரில் குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாத் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். குற்றம் சுமத்தப்பட்ட சுஜியிடம் போலீஸார் விசாரித்துவருகின்றனர். விசாரணையில் சென்னை டாக்டர் மட்டுமல்ல, இன்னும் பலரை அவர் ஏமாற்றியதற்கான ஆதாரங்கள் போலீஸாரிடம் சிக்கியுள்ளன. விசாரணைக்குப்பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி.ஸ்ரீநாத் தெரிவித்தார். மேலும் சுஜி, டிப்ளமோ இன்ஜினீயரிங் முடித்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.