‘பன்றிக்காக போட்ட மின்வேலி’..தெரியாமல் கால் வைத்து தூக்கி வீசப்பட்ட இளைஞர்.. வேலூர் அருகே சோகம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பள்ளிகொண்டா அருகே விவசாய நிலத்தில் பன்றிக்காக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே உள்ள பள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மகாதேவன் (52). இவர் அப்பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் கரும்பு மற்றும் கடலை பயிரிட்டுள்ளார். இரவு நேரங்களில் காட்டுப் பன்றிகள் சேதப்படுத்துவதால் விவசாய நிலத்தை சுற்றி மின்வேலி அமைத்துள்ளார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சரவணன் மகன் சந்தோஷ்குமார் (22) என்பவர் மகாதேவன் நிலத்தின் வழியாக சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்வேலியில் சிக்கிய சந்தோஷ்குமார் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப் பார்த்த ஊர்மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் சந்தோஷ்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நிலத்தின் உரிமையாளர் மகாதேவனை கைது செய்துள்ளனர். இந்நிலையில் மின்வேலில் சிக்கி உயிரிழந்த மகனின் உடலைப் பார்த்து அவரது தாய் கதறி அழுத சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
